திருவள்ளூர்

பொதுமக்களுக்கு உதவிட தயார்நிலையில் குழுக்கள் – அமைச்சர் பா.பென்ஜமின் பேட்டி

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட ஏரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்களுக்கு உதவிட தயார் நிலையில் குழுக்கள் இருப்பதாகவும் அமைச்சர் பா.பென்ஜமின் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அடையாளம்பட்டு ஊராட்சியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய நியாய விலைக்கடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக ஊரக தொழில்துறை அமைச்சரும், மதுரவாயல் பகுதி கழக செயலாளருமான பா.பென்ஜமின், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நியாயவிலைக் கடையை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது;-

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலமாதி ஊராட்சி பொதுமக்கள் இப்பகுதியில் பகுதி நேர நியாய விலை கடை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் அம்மாவின் அரசு முழுநேர நியாயவிலை கடை அமைத்து இன்று திறப்பு விழா காண்கிறது. இதேபோல் இப்பகுதியில் மக்களின் கோரிக்கையை ஏற்று மகளிர் மேம்பாட்டு கட்டடம் கட்டப்பட்டு மக்கள் பயன்பெறும் வகையில் சிறிய நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற முதலமைச்சர் குறைதீர் முகாமில் மனு அளித்த முதியோர், தாய்மார்கள், பயனாளிகள் பயன்பெறும் வகையில் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு ஒரு மனு கூட நிராகரிக்கப்படாமல் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் நேற்று முன்தினம் அம்மாவின் அரசு முதியோர் உதவித்தொகை பெற ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்களின் மீது அக்கறை கொண்ட அரசாக அம்மாவின் வழியில் வரும் எடப்பாடியார் அரசு திகழ்வதால் உங்கள் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி நடுநிலைப் பள்ளியாகவும், வானகரத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக விரைவில் தரம் உயர்த்தப்படும். விரைவில் இப்பகுதியில் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படும்.

எல்லா வகையிலும் மக்களின் தேவையறிந்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றுகின்ற அரசு, அம்மாவின் அரசு. அதன் வழியில் வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு தான் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே தாய்மார்களாகிய நீங்கள் எப்போதும் போல் அம்மாவின் அரசுக்கு உறுதுணையாக இருங்கள்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

பின்னர் அமைச்சர் பா.பென்ஜமின் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி,செம்பரம்பாக்கம்,புழல் ஏரி,சோழவரம் ஏரிகள் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், பருவமழையை எதிர்கொள்ள கழக அரசு தயாராக இருக்கிறது. எந்த விதமான பாதிப்புகளும் பொதுமக்களுக்கு ஏற்படாத வகையில் அனைத்து குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளை கண்காணித்து வருகின்றனர் என்றார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் ராஜா.எ.பேரழகன்,வில்லிவாக்கம் ஒன்றிய துணைச் செயலாளர் செல்வி சரவணன், விஜயன் ,ஆறுமுகம், ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.