தற்போதைய செய்திகள்

சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் 5 ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பெருமிதம்

தேனி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடம் வகிக்கிறது என்று அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பெருமிதத்துடன் கூறினார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட சுருளி அருவியில் நடைபெற்ற சுருளி சாரல் விழா தொடக்க விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேசியதாவது:- 

தமிழகம் சுற்றுலாத்துறையில் பல்வேறு வளர்ச்சிகளை பெற்று மின்னி மிளிர்ந்து கொண்டிருக்கிறது. சுற்றுலாவிற்கு ஏற்ற நாடு இந்தியா. இந்தியாவிலேயே, சுற்றுலாவிற்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு. யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட 5 உலக பாரம்பரிய சின்னங்களான மாமல்லபுரம் கடற்கரை கோவில், அர்ச்சுனன் தவசு சிற்பம், தஞ்சை பிரகதீஸ்வரர் திருக்கோயில், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் திருக்கோயில், தாராசுரம் ஐராதீஸ்வரர் திருக்கோயில், உதகை மலை ரயில் முதலியன தமிழ்நாட்டில் உள்ளன.

தேனி மாவட்டத்தில் சுருளி அருவி மிகவும் ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது. இந்த அருவியில் 150 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் விழுகிறது. இந்த அருவிக்கு தினமும் பல வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளும், பொதுமக்களும் வந்து நீராடி செல்கின்றனர்.

உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை, தொடர்ந்து 5 ஆண்டுகளாக தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்ததை வகித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், சுருளி அருவிக்கும், தேனி மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்களுக்கும், 40 லட்சத்திற்கும் மேலான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, வைகை அணை, சோத்துப்பாறை அணை, கும்பக்கரை அருவி, குச்சனூர், சுருளி அருவி, மேகமலை, சின்ன சுருளி அருவி, போடி மெட்டு, குரங்கனி, டாப் ஸ்டேசன் போன்ற புகழ் வாய்ந்த சுற்றுலா தலங்கள் உள்ளன. தமிழக அரசு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் ஏற்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

சுருவி அருவியில் சுற்றுலாத்துறையின் சார்பில் ஓய்வறை, பூங்கா மற்றும் மின் விளக்குகள் போன்ற வசதிகள் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டிலும், இதர மேம்பாட்டுப் பணிகள் ரூ.19.50 லட்சம் மதிப்பீட்டிலும் செய்து தரப்பட்டுள்ளன. இதுதவிர, மாவட்டத்தின் இதர சுற்றுலாத்தலங்களான கும்பக்கரை நீர் வீழ்ச்சி, சின்ன சுருளி அருவி, குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், வைகை அணை, டாப் ஸ்டேசன் போன்ற இடங்களில் ரூ.260 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, சுற்றுலாப்பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மத்திய அரசு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.459.39 லட்சம் மதிப்பீட்டில் வைகை அணையில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுற்றுலா தான், மனிதனை மனிதன் புரிந்து கொள்ளவும், ஒரு இடத்தினை சிறப்பை, பண்பாட்டை, அரிய உதவுகின்ற காலக்கண்ணாடி என்பதையும் அனைவருக்கும் உணர்த்துவோம். மண், விண், நீர், நெருப்பு, காற்று ஆகிய ஐம்புதங்களை காப்பதன் மூலம் வளமான தமிழகத்தை உருவாக்குவோம் என்ற உறுதி மொழியினை நாம் அனைவரும் கடைபிடித்திட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேசினார்.