தற்போதைய செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல் விவகாரம், தி.மு.க.வின் இரட்டை வேடம் – அம்பலம் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் எதிர்கொள்ள அ.இ.அ.தி.மு.க. தயாராக இருக்கிறது. உள்ளாட்சித்தேர்தல் விவகாரத்தில் குற்றத்தை எங்கள் மீது சுமத்த ஸ்டாலின் முயற்சிக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு கோரி 2016-ல் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது தி.மு.க. தான். மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என தேர்தல் அறிவித்தால் தி.மு.க.வுக்கு தேர்தல் ஜூரம் வந்து விட்டது. உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அ.இ.அ.தி.மு.க.வுக்கு அளித்த மகத்தான வெற்றி தி.மு.க.வை மிரள வைத்திருக்கிறது. அதனால் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தி.மு.க. பயப்படுகிறது. நொண்டிக்கு சறுக்கினது தான் சாக்கு என்பது ேபால் எதையாவது காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் தடுக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார். உச்சநீதிமன்றத்துக்கு போகப் போவதாக அறிவித்திருக்கிறார்.

ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது நீதிமன்றத்தை நாடி தேர்தலை தடுத்தது தி.மு.க.. இப்போது அதே பாணியில் நீதிமன்றத்தை நாடி தேர்தலை தடுத்து நிறுத்த பார்க்கிறது. ஆனால் தி.மு.க.வின் முயற்சி ஒருபோதும் பலிக்காது.
உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும். அதில் கழகம் அமோக வெற்றிபெறும். ஏதாவது காரணம் காட்டி தி.மு.க. தேர்தலை முயற்சித்தால் அது தி.மு.க.வின் பலவீனமே தவிர நியாயமான காரணமாக இருக்காது.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.