தற்போதைய செய்திகள்

நான் அமைச்சராக அம்மா தான் காரணம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உருக்கம்

கோவை

நான் அமைச்சராக புரட்சித்தலைவி அம்மாதானட காரணம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உருக்கமாக பேசினார்.

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் ரூ.7.41 கோடி மதிப்பில் கட்டுப்பட்டுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டல புதிய அலுவலகக் கட்டிடத்தை கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். பின்னர் அவர் புதிய தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார்.

இவ்விழாவில், கோயம்புத்தூர் மாநகராட்சியில் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கான பணி நியமன ஆணைகளை இளநிலை உதவியாளர் தட்டச்சர், அலுவலக உதவியாளர், துப்புரவுப் பணியாளர், ஆகிய பணியிடங்களுக்கான ஆணைகளை 37 பேருக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கி சிறப்புரையாற்றினார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியபோது:-

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் கட்டப்பட்டு உள்ளது. இதற்கு முன்பிருந்த கட்டிடத்தில் தான் நான் முதல் முறையாக பேரூராட்சி தலைவராக இருந்தேன். இதைத்தொடர்ந்து உள்ளாட்சி துறைக்கு அமைச்சராக கூடிய வாய்ப்பை புரட்சித்தலைவி அம்மா எனக்கு அளித்தார்.

அந்த வாய்ப்பை வழங்கியதால் தான் கோவை மாவட்டத்திற்கு 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் செய்து முடித்து உள்ளோம். பேரூராட்சித்தலைவராக இருந்த நான் இன்று உள்ளாட்சித்துறையில் அமைச்சராக இருக்கிறேன் என்றால் அதற்கு புரட்சித்தலைவி அம்மா தான் காரணம்.

இன்று கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில், ரூ.7.41 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் அமர்ந்து வரிசெலுத்துவதற்கான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து தகுந்த நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் ஏராளமான சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வேறு எந்த உள்ளாட்சி துறை அமைச்சரும் செய்யாத அளவுக்கு ஏராளமான பணிகளை செய்து உள்ளோம். தமிழகத்தில் நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக வந்த பிறகுதான் ஏராளமான சாலைகள் அமைக்கப்பட்டது. தற்போது 1 லட்சத்து 49 ஆயிரத்துக்கும் மேல் சாலைகள் உள்ளன. சென்னையில் மாநகரில் அதிகளவு சாலை அமைத்ததும் கழக ஆட்சியில்தான்.

தமிழகம் முழுவதும் 12,524 ஊராட்சிகள், 355 யூனியன், 528 பேரூராட்சிகள், 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் இருகின்றன. இதுதான் தமிழ்நாட்டின் கட்டமைப்பு. நெடுஞ்சாலை தவிர இந்த கட்டமைப்புகளிலும் அதிகளவு சாலைகள் போட்டு உள்ளோம். இந்தியாவிலேயே அதிகளவு சாலைகள் போடப்பட்டதில் தமிழகம் முதல் இடம் வகிக்கிறது.

மேலும் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்திலும் ஏராளமானோருக்கு வீடு கட்டித்தரப்பட்டுள்ளது. உள்ளாட்சித்துறையின் சிறப்பான சேவைக்காக 84 விருதுகள் பெற்றுள்ளோம். தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அவர் முதல் அமைச்சராக வந்த பிறகு தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்கள் பயன்பெறும் வகையில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

கோவை பாலக்காடு மெயின்ரோடு அகலப்படுத்தப்பட்டு விபத்துகளை குறைத்து உள்ளோம். கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குறிச்சி குளம் சேர்க்கப்பட்டு உள்ளது. இங்கு படகு இல்லம், நடைபயிற்சி, குழந்தைகள் விளையாட்டு என்று பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அனைத்து வசதிகலும் இடம் பெற உள்ளன.

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வெள்ளலூரில் ரூ.168.00 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படவுள்ளது. அத்திக்கடவு அவினாசி 2-ம் திட்டத்தில் தொண்டாமுத்தூர் சேர்க்கப்பட்டு உள்ளது. கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரி 90 கோடியில் நவீன மயமாக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு நிகராக அனைத்து சிகிச்சைகளும் இங்கு தரப்படுகிறது. இதேபோல் குனியமுத்தூர், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை என 3 இடங்களில் அரசு ஆஸ்பத்திரிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.

ரூ.395.41 கோடி மதிப்பில் குறிச்சி, குனியமுத்தூர், துடியலூர், வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னவேடம்பட்டி, விளாங்குறிச்சி ஆகிய இடங்களில் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகிறது. குனியுத்தூர், குறிச்சி, செல்வபுரம் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.3.00 கோடி மதிப்பில் குனியமுத்தூர் பகுதியில் சிறுவாணியிலிருந்து குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியும், ரூ.24.80 கோடி மதிப்பில் நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் மற்றும் புட்டுவிக்கி சாலை அமைக்கும் பணி மற்றும் ரூ.11.80 கோடி மதிப்பில் புட்டுவிக்கி சாலை இணைப்பில் தடுப்புச்சுவர் மற்றும் தார்சாலை அமைக்கும் பணியும் முடிவுற்றுள்ளன.

ஓட்டுக்காக மட்டுமே மக்களை சந்திக்கும் திமுகவினருக்கு விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைதேர்தலில் நல்ல பாடம் கற்பித்துவிட்டனர். அதிமுகவை மாபெரும் வெற்றியை தந்தனர். மக்கள் நலன்காக்க பல்வேறு திட்டங்களை தந்து மக்களை தினந்தோறும் நாங்கள் சந்தித்து வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.