தற்போதைய செய்திகள்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பு மொழி பயிற்சி வகுப்பு துவக்கம்

சென்னை

தமிழ்நாடு அரசால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மாணவர்களுக்கு தமிழ் மொழியின் வளமையினையும் அதன் சிறப்புகளையும் பிற நாட்டவர், பிற மொழியினரிடையே கருத்து பரிமாற்ற வழி மேற்கொள்ள வசதியாக மாணவர்களுக்கு பிறமொழியில் புலமை கொண்டுள்ள சிறந்த மொழி ஆசிரியர்களை கொண்டு சிறப்பு மொழிப்பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு 2019-2020-ம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நேற்று சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அண்ணா கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராசன் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன் தலைமையுரையாற்றினார். தமிழ்மொழி (ம) மொழியியல் புல இணை பேராசிரியர் பெ. செல்வக்குமார் வரவேற்றார்.

மகாத்மா காந்தி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் விஜேந்திரன் சீமன் வாழ்த்துரை வழங்கினார். பிரெஞ்சு மொழி பயிற்றுநர் பேராசிரியர் சுதா சுரேஷ், இந்தி மொழி பயிற்றுநர் பா.சர்தார் சிங்கு ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிறுவன முனைவர் பட்ட மாணவர்ச.ஆசைக்கண்ணு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் நிறுவனப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட, ஆய்வியல் நிறைஞர் மாணவர்கள், முதுகலை தமிழ் மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.