தற்போதைய செய்திகள்

கார்த்திகை தீபத் திருவிழா,திருவண்ணாமலையில் சிறப்பு கைத்தறி கண்காட்சி – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் சிறப்பு கைத்தறி கண்காட்சியை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மத்திய அரசின் கைத்தறி ஜவுளி ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணி நூல் துறை இணைந்து சிறப்பு கைத்தறி கண்காட்சி திருவண்ணாமலை நகராட்சி, திருமஞ்சன கோபுர வீதியில் அமைந்துள்ள ஜி.எம். திருமண மஹாலில் வருகிற 14-ந்தேதி வரை நடத்துகிறது. இக்கட்காட்சியை கடந்த சனிக்கிழமை இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் க.சு.கந்தசாமி, திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் ஸ்ரீதேவி, கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குநர் எம்.எஸ்.கே.சூர்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த்குமார், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சியில் மாநிலம் முழுவதிலும் உள்ள பிரசித்தி பெற்ற நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட நவீன வடிவமைப்புகளை கொண்ட கண்கவர் கைத்தறி ரகங்களான ஆரணி, காஞ்சிபுரம், திருபுவுனம், சேலம், சிறுவந்தாடு அசல் பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், பட்டு அங்கவஸ்திரம், கோவை காட்டன், பரமக்குடி காட்டன், மதுரை சுங்குடி, சின்னாளப்பட்டி மற்றும் விளந்தை வெங்கடகிரி காட்டன் சேலைகள் மற்றும் காட்டன் வேட்டிகள், துண்டுகள், ஈரோடு போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், திரைச் சீலைகள், பவானி ஜமுக்காளம், குறிஞ்சிப்பாடி, குடியாத்தம் லுங்கிகள், கைக்குட்டைகள், கொசுவலைகள் போன்ற கைத்தறி ஜவுளி ரகங்களுடன், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 54 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் விற்பனைக்கு உள்ளன. கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து கைத்தறி ரகங்களுக்கும் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். மேலும், குறிப்பிட்ட பட்டு ஜவுளி இரகங்களுக்கு 35 சதவீதம் முதல் 55 சதவீதம் அல்லது ரூ.500 வரை தள்ளுபடி வழங்கப்படும்.