தற்போதைய செய்திகள்

அம்மாவின் லட்சிய கனவை முதல்வர் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேட்டி

திண்டுக்கல்

மாவட்டம் தோறும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற அம்மாவின் லட்சிய கனவை முதலமைச்சர் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார் என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்வது குறித்து 01.12.2019 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமி முன்னிலையில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசின் அனுமதியும், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நிதியுதவியும் வழங்க பாரத பிரதமருக்கு முதலமைச்சர் கோரிக்கை வைத்தார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று பாரத பிரதமர் 23.10.2019 அன்று தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் அரசு புதிய மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதோடு மட்டுமல்லாமல் தற்போது கூடுதலாக கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியுள்ளார். ஒரே ஆண்டில் 9 புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனை ஆகும். இதற்கென 2,925 கோடி ரூபாய்க்கான மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கி, அதில் 1,755 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பங்காக 1,170 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.

இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் தமிழ்நாடுதான் மிக சிறந்த மாநிலமாகவும், முன்னணி மாநிலமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்துகூட சிகிச்சைக்காக ஏராளமானோர் சென்னைக்கும் மற்ற நகரங்களுக்கும் வந்த வண்ணம் இருக்கிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை அடுத்து தொடர்ந்து தமிழகம் சிறந்த மருத்துவ வசதி அளிக்கும் மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. மாவட்டந்தோறும் ஒரு மருவத்துவக் கல்லூரி என்ற தொலைநோக்கத்தோடு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். அம்மாவின் அந்த லட்சிய கனவை, அவர் வழி நின்று செயல்படும் முதல்வர் அதனை படிப்படியாக நிறைவேற்றி கொண்டிருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைவதற்கு திண்டுக்கல் கிழக்கு வட்டம், அடியனூத்து கிராமத்தில் 8.61.0 எக்டேர் நிலம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த பகுதியில் மருத்துவக் கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதி மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் விஜயகுமார், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் மீனா, கூட்டுறவு அச்சகச் சங்க தலைவர் ஜெயசீலன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.