இந்தியா மற்றவை

தமிழகத்திற்கு அந்நிய முதலீடுகளை ஈர்க்க முதல்வர், துணை முதல்வர் தீவிர முயற்சி – மக்களவையில் ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. பேச்சு

புதுடெல்லி

தமிழகத்திற்கு அந்நிய முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக மக்களவையில் பேசிய ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. கூறினார்.

மக்களவையில்  வரி விதிப்பு சட்ட திருத்த மசோதா-2019 மீதான விவாதத்தில் கழக மக்களவை குழு தலைவர் ப.ரவீந்தரநாத்குமார் எம்.பி. பேசியதாவது:-

வரி விதிப்பு சட்ட திருத்த மசோதா-2019க்கு முதலில் அஇஅஇதிமுக சார்பில் ஆதரவினை தெரிவித்து கொள்கிறேன். அதற்கு காரணம், தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. கீழ்மட்ட அளவில் வேலை வாய்ப்பினை பெருக்கவும், தொழிற்துறை வளர்ச்சிக்கு வித்திடவும் இந்த அரசின் இன்னொரு முயற்சியாக நான் கருதுகிறேன்.

உலகளாவிய பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது என்பதை நாம் அறிவோம். 2018-ம் ஆண்டில் 90 சதவீத உலக பொருளாதாரம் குறைந்த சதவீதத்தில் வளர்ச்சி பெறும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்திருக்கிறது. நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி சதவீதத்தை 7.3 சதவீதத்திலிருந்து 2019-ம் ஆண்டில் 6.1 சதவீதமாக சர்வதேச நாணய நிதியம் குறைத்திருக்கிறது. இதனை அறிந்துதான் நமது பிரதமர் தலைமையிலான அரசு “வேறு வரி விலக்குகளை பெறாத கம்பெனிகளின் கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும், உற்பத்தி பிரிவில் தொடங்கப்படும் புதிய கம்பெனிகளுக்கு 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகவும் குறைப்பதற்கு” அவசர சட்டம் கொண்டு வந்தது.

அந்த அவசர சட்டம் உரிய திருத்தங்களுடன் தற்போது மசோதாவாக வந்து விட்டது. உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட தேக்க நிலைமையால் நம் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட தாக்கத்தை தணிப்பதற்கும், தொழிற்துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் இந்த மசோதா மூலம் அரசு பொறுப்புடன் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது.

உலகளாவிய பொருளாதார தேக்க நிலைமையை சமாளிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் அதே நேரத்தில், குறைந்திருக்கும் அந்நிய முதலீட்டை மனதில் வைத்து, இந்த அரசு உற்பத்தி துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு மாநில அரசுகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் அந்நிய முதலீடுகளை பெறுவதற்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பல்வேறு முயற்சிகளை வெற்றி கரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த “தமிழ்நாடு வணிக எளிதாக்குதல்” சட்டத்தால் மாநிலத்தில் தொழில் தொடங்குவது எளிமையாக்கப்பட்டு- இந்த வருடம் மட்டும் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. ஆகவே அந்நிய முதலீடுகள் அதிகம் வருவதற்கு தேவையான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும். அதற்கு தேவையான திருத்தங்களையும் மேற்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

உலகளாவிய பொருளாதார தேக்க நிலைமையின் தாக்கத்தையும் கடந்து செல்லும் விதத்தில், நாட்டின் பொருளாதாரத்தை புதிய உயரத்திற்கு செலுத்துவதற்காக நிதியமைச்சர், பிரதமர் ஆகியோர் எடுத்து வரும் அர்ப்பணிப்பு மிகுந்த நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த திடமான நம்பிக்கையுடன் இந்த மசோதாவினை நான் வரவேற்கிறேன்.

இவ்வாறு ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. பேசினார்.