தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் ஓரிரு நாளில் மழை நீர் முற்றிலும் அகற்றம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி

தூத்துக்குடி:-

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் ஓரிரு நாளில் முற்றிலும் அகற்றப்படும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

தூத்துக்குடி மவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை வெள்ள பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நடைபெற்றது. கதர்துறை முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான குமார் ஜெயந்த், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பருவமழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கமாக கேட்டறிந்தார். மேலும், ஒவ்வொரு துறை அலுவலர்களும் விரைந்து பணிகளை முடிக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறியதாவது:-

வடகிழக்கு பருவ மழை இயல்பு அளவை காட்டிலும் சுமார் 30 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி குடிமராமத்து திட்டத்தின்கீழ் அனைத்து ஏரி, குளம், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளம், கண்மாய்கள் நீர் நிலைகள் 90 சதவீதம் நிரம்பியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் சாத்தான்குளம் பகுதியில் 18 செ.மீ., தூத்துக்குடி பகுதியில் 16 செ.மீ. என அனைத்து பகுதிகளிலும் அதிக அளவில் மழை பெய்துள்ளதால் தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதியில் வெள்ள பாதிப்பு ஓரிரு இடங்களில் ஏற்பட்டுள்ளது.

போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டிருந்ததாலும், ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும் எந்த ஒரு உயிர் சேதமும் இல்லை. 54 குடிசைகளில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக சேதங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற 47-க்கும் மேற்பட்ட இடங்களில் பம்பு மூலம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் ரயில்வே துறை, ஸ்பிக், துறைமுக மேம்பாட்டு கழகம் மூலம் கூடுதலாக மோட்டார்கள் பெறப்பட்டு தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் சுகாதாரத்துறை மூலம் தொற்றுநோய்கள் ஏற்படாத வகையில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அப்பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவ முகாம்கள் நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 2015 வெள்ளத்திற்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ரூ.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வெள்ள நீரை அகற்றிட தேவையான பணிகள் செய்யப்பட்டு மேலும் பக்கிள் ஓடை சீரமைக்கப்பட்டது. மேலும், பாதாள சாக்கடை திட்டத்தின் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். ஓரிரு தினங்களுக்குள் அனைத்து பகுதியிலும் தேங்கியுள்ள நீர் அகற்றப்பட்டு சரி செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

இதன் பின்னர் அமைச்சர் மற்றும் முதன்மை செயலாளர் ஆகியோர், தூத்துக்குடி மாநகராட்சி குறிஞ்சிநகர் மற்றும் செல்வநாயகபுரம் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரினை மாநகராட்சி மூலம் வெளியேற்றப்படும் பணிகளை பார்வையிட்டனர்.