சிறப்பு செய்திகள்

புரட்சித்தலைவியின் 3-ம் ஆண்டு நினைவு தினம் – அம்மா நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் மலர் அஞ்சலி

சென்னை

புரட்சித்தலைவி அம்மாவின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக அண்ணா சாலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரை ேநாக்கி அமைதி பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பல்லாயிரக்கணக்கான கழகத்தினர் கண்ணீர் மல்க நடந்து சென்றனர். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து பேரணியில் பங்கேற்றனர்.

பேரணி நினைவிடம் சென்றடைந்ததும் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் அம்மாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களை தொடர்ந்து அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசிக்க நினைவிடத்தில் திரண்டிருந்த அமைச்சர்களும், தொண்டர்களும் உறுதிமொழியை திரும்ப சொல்லி சபதம் ஏற்றனர்.

அம்மா கட்டி காத்த கழகத்தையும், கழக ஆட்சியையும் தொடர்ந்து நிலைநிறுத்த பாடுபடுவோம் எனவும், கடந்த தேர்தல்களில் மட்டுமல்லாது வரும் உள்ளாட்சி தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்ற கழகத்தின் அமோக வெற்றிக்கு அயராது பாடுபடுவது எனவும் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

பேரணியில் கழகத்தின் அனைத்து பிரிவை சேர்ந்தவர்களும் அணிவகுத்து சென்றனர். முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தலைமை கழகத்தில் அம்மாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலும் கழகத்தினர் அமைதி பேரணி நடத்தி அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இது மட்டுமல்லாது புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் நிகோபர், துபாய் போன்ற நாடுகளிலும் அம்மாவின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் அம்மாவின் நினைவை போற்றி தங்கள் டுவிட்டரில் கண்ணீர் அஞ்சலியை பதிவு செய்திருந்தனர்.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அம்மாவின் நினைவு நாளையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே அம்மாவின் திருவுருவ படத்திற்கு முன்னால் பொதுமக்கள் தேங்காய் பழம் வைத்து , ஊதுபத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.