தற்போதைய செய்திகள்

தருமபுரி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு தேவையான உபகரணங்கள் கையிருப்பு – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தருமபுரி

ெகாரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும், வசதிகளும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கையிருப்பு உள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ள கொரோனா சிறப்பு வைரஸ் காய்ச்சல் பிரிவினை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார்.

பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :-

வெளிநாட்டிலிருந்து தர்மபுரிக்கு திரும்பியவர்கள் 400 பேர் உள்ளனர். இவர்களில் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு நல்ல நிலையில் 28 பேர் உள்ளனர். மற்ற 372பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. இருந்தபோதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனர்.

வெளிமாநிலங்களில் இருந்து தர்மபுரிக்கு வருகை புரிந்தோர் 8575 பேர் உள்ளனர். தமிழக முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க விழித்திரு, தனித்திரு, வீட்டிலிரு என்ற அறிவுரைகளுக்கு இணங்க இவர்கள் அனைவரும் அவர்களின் வீடுகளிலேயே, தனிமைப்படுத்தப்பட்டு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இவர்களை கண்காணிப்பதற்காக மாவட்டம் முழுவதும் 50 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் முழுமையாக ஈடுபட்டு வருகிறது.‌‌

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100 ஆண்களும், 64 பெண்களும் தனித்தனியாக அறைகளில் சிகிச்சை பெறும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவும் தயார் நிலையில் உள்ளது. செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில் 700 பேர் சிகிச்சை பெறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. கூடுதலாக தேவைப்பட்டாலும் 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கும் மேல் தேவைப்பட்டால் பென்னாகரம் சாலையிலுள்ள ஜெயம் சுயநிதிப் பொறியியல் கல்லூரியில் ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர் தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தர்மபுரி திரும்பியவர்கள் தங்களுக்கு வைரஸ் தொற்று குறித்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

அருகில் உள்ளவர்களும் இத்தகவல் அறிந்தால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.தற்போது கொரானா வைரஸ் குறித்த பரிசோதனை சேலம் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து சென்னை மருத்துவ கல்வி இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு நாட்களில் இதற்கான அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பின்பு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் செயல்படும். காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கடைகள் திறந்திருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

இப்பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளி முறையை பின்பற்றி ஒருவருக்கு ஒருவர் மூன்று அடி இடைவெளியில் வரிசையாக நின்று பொருட்களை வாங்க வேண்டும். மருத்துவர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வசதிகளும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.ராஜன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் பூ.இரா.ஜெமினி, தருமபுரி மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் பூக்கடை பெ.ரவி, தருமபுரி கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் பொன்னுவேல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் சிவப்பிரகாசம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) எம்.சிவக்குமார், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (ஓய்வு) சீனிவாசராஜ் மற்றும் அரசு மருத்துவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.