தற்போதைய செய்திகள்

கேரளாவில் சிக்கித் தவித்த 500 தமிழர்கள் குடும்பத்தினருக்கு உணவுப்பொருட்கள் – வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ அனுப்பி வைத்தார்

திண்டுக்கல்

கேரளாவில் சிக்கி தவித்த வேடசந்தூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 500 பேரின் குடும்பத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை மாவட்டக் கழக துணைச் செயலாளரும், வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் வி. பி. பி. பரமசிவம் அனுப்பி வைத்தார்.

உலகமெங்கும் கொரோனா ஆட்டிப்படைத்து வருகிறது. நமது இந்திய நாட்டில் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு பணிகளை போர்க்கால நடவடிக்கைகளாக துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கோ ஒரு மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டத்திற்கோ செல்லாத வகையில் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அதிரடி நடவடிக்கையால் வெளிமாநிலங்களுக்கு கூலி வேலைக்கு சென்றவர்கள் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் பகுதியை சேர்ந்த கிராமங்களான கம்பிளியம்பட்டி, தென்னம்பட்டி, பாகநத்தம், பிலாத்து, எரியோடு வெல்லம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கேரளா மாநிலத்தில் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.எர்ணாகுளம் பகுதியில் உள்ள வாத்துருத்து, தேவரா ஆகிய பகுதிகளில் தங்கி கட்டிட வேலைக்கு கொத்தனார், சித்தாள் வேலைக்கு சென்று வருகின்றனர். கொரோனா பிரச்சனை கேரளத்தில் தலைவிரித்து ஆடிய போது 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது சொந்த ஊருக்கு உடனடியாக திரும்பி விட்டனர்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மீதமுள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது ஊருக்கு செல்ல முடியாமல் கேரளாவில் சிக்கிக் கொண்டனர்.அவர்கள் தங்களது ஊருக்கு செல்ல வழியில்லாமல் போக்குவரத்து வாகன வசதி இல்லாததால் மிகுந்த அவதியுற்றனர். மேலும் உணவு பொருட்கள் கிடைக்காததால் அவர்களால் சமைக்க முடியவில்லை. உணவகமும் மூடி விட்டதால் உணவு கிடைக்காமல் பசி பட்டினியால் வேதனையுற்று சொல்லொணா துயரத்திற்கு ஆளானார்கள். இதுகுறித்து மாவட்ட கழக துணைச் செயலாளரும், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கவனத்திற்கு வந்தது.

நோய் தொற்று காரணமாக இருமாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளதால் உணவுப் பொருட்களை உடனே கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் உணவு பொருட்களை கொண்டு செல்வதற்காக மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்தார். மாவட்ட ஆட்சியர் மு .விஜயலட்சுமியை நேரில் சந்தித்து கேரளத்தில் தவித்துக்கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு உணவு பொருட்களை அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, ரவை, சேமியா, எண்ணெய் ஆகியவற்றை ஒரு வேனில் ஏற்றி மாவட்ட நிர்வாக அனுமதியுடன் கேரளாவிற்கு வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.பி.பரமசிவம் அனுப்பி வைத்தார்.

அதோடு கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்ட துணை ஆட்சியர் இன்ப சேகரனை தொடர்பு கொண்டு தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு தொடர்ந்து தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினரின் தீவிர முயற்சியால் கேரளாவில் கடும் வேதனையுற்ற மக்களுக்கு உணவு கிடைத்தது. இதனால் வடமதுரை ஒன்றிய பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் மனம் நெகிழ்ந்து தமிழக அரசுக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.