தமிழகம்

திண்டுக்கல் உள்பட 10 மாவட்டங்களில் ரூ.59 கோடியில் 14 ஆற்றுப்பாலங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்…

சென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்டம், பொருந்தலாற்றின் குறுக்கே 5 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆற்றுப் பாலத்தினை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், திருவண்ணாமலை, ஈரோடு, கரூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் 51 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 ஆற்றுப்பாலங்கள், ரயில்வே கடவில் கட்டப்பட்டுள்ள ஒரு சாலை மேம்பாலம் மற்றும் ஒரு சாலை கீழ்பாலத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதுகுறித்து அரசின் செய்திகுறிப்பு வருமாறு:-

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதிசெய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகள்அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், பொருந்தல் கிராமத்தில், பொருந்தலாற்றின் குறுக்கே 5 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆற்றுப் பாலத்தினை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூரில் உள்ள அனக்காவூர் ஏரியில் 3 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஈரோடு மாவட்டம், கொளப்பலூரில் 1 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கரூர் மாவட்டம், நந்தனூரில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கோயம்புத்தூர் மாவட்டம், அன்னதாசம்பாளையத்தில் ஓடையின் குறுக்கே 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், புதுக்கோட்டை மாவட்டம், ஊரணிபுரத்தில் நரியாறு ஆற்றின் குறுக்கே 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ஆவுடையார் கோவில் கண்மாயின் குறுக்கே 1 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கமலக்குடியில் கண்மாயின் குறுக்கே 1 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் பட்டமுடையானில் கல்லணை கால்வாய் பிரிவு வாய்க்கால் குறுக்கே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்,

மதுரை மாவட்டம், நெடுங்குளத்தில் குண்டாறு ஆற்றின் குறுக்கே 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திண்டுக்கல் மாவட்டம், மோர்பட்டியில் வரட்டாறு ஆற்றின் குறுக்கே 1 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் வேலாயுதம்பாளையத்தில் காட்டோடையின் குறுக்கே 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சிவகங்கை மாவட்டம், உருவாட்டியில் ஓடையின் குறுக்கே 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், ராமநாதபுரம் மாவட்டம், ஆனந்தூரில் ஓடையின் குறுக்கே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 14 ஆற்றுப்பாலங்கள்,

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சிறுதையூர் – கொள்ளிடக்கரை சாலையில் ரயில்வே கடவு எண் 228-க்கு மாற்றாக காட்டூர் – லால்குடி ரயில்வே நிலையங்களுக்கு இடையே 26 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம்; ராமநாதபுரம் மாவட்டம், மறவமங்கலம் – இளையாங்குடி – பரமக்குடி – முதுகுளத்தூர் – சாயல்குடி சாலையில், மானாமதுரை மற்றும் பரமக்குடி ரயில்வே நிலையங்களுக்கு இடையில் 2 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரயில்வே கீழ்பாலம் என மொத்தம், 56 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 ஆற்றுப்பாலங்கள், ரயில்வே கடவில் கட்டப்பட்டுள்ள ஒரு சாலை மேம்பாலம் மற்றும் ஒரு சாலை கீழ்பாலத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், தலைமைப் பொறியாளர் (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்) எம்.கே.செல்வன், தலைமைப் பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலை) என்.பாலமுருகன், தலைமைப் பொறியாளர் (திட்டங்கள்) எம்.முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.