தற்போதைய செய்திகள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அம்மாவின் அரசு முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது – அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதம்

ஈரோடு

தமிழகத்தில் கொரோனா வைரஸை தடுக்க அம்மாவின் அரசு 100 சதவீதம் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் புதிய பஸ் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தினசரி காய்கறி கடைகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்களுக்கு முக கவசங்களையும் வழங்கினார். மேலும் வியாபாரிகளை கால சூழ்நிலை கருதி அதிக விலைக்கு காய்கறிகளை விற்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் கே.சி.கருப்பணன் சென்ற வழியெங்கும் பொதுமக்கள் முகக் கவசங்கள் இல்லாமல் வந்த போது அவர்களுக்கு முக கவசங்களை கொடுத்து வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். பின்பு அம்மாபேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாகவும், பவானி மேட்டூர் மெயின் ரோடு பகுதிகளிலும் நோய்த்தடுப்பு மருந்து தெளிக்கும் பணியினை துவக்கி வைத்து உடன் சென்று பார்வையிட்டார். பின்பு தூய்மைப் பணியாளர்களுக்கு உணவினையும் வழங்கினார்.

அதன்பின் அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பொதுமக்களின் ஒத்துழைப்பு நிறைய ஊர்களில் நன்றாக உள்ளது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அவர் பணி மேலும் சிறக்க பொதுமக்களாகிய நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இந்த நிலைமை சீக்கிரம் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

மேலும் பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், தினமும் நான்கைந்து வேப்ப இலைகளை வாயில் போட்டு மென்று அடக்கி வைத்து 10 நிமிடம் 15 நிமிடம் அதன் கசப்புத்தன்மை உடம்பில் இறங்கும்போது எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.

வேம்பு கசாயம் கிடைக்காத இடத்தில் வேப்பிலைகளை பயன்படுத்தலாம். நானும் அதுபோல் கடைபிடித்து வருகிறேன்.. தமிழகத்தில் கொரோனா வைரஸை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் செயல்படும் அம்மாஅரசு 100 சதவீதம் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

ஆய்வின் போது பவானி நகர செயலாளர் என்.கிருஷ்ணராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் கே.கே.விஸ்வநாதன், பி.பி.மோகன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்,யூ.எஸ்.சுந்தர்ராஜன் ,அம்மாப்பேட்டை பாலசுப்பிரமணியம் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.