தற்போதைய செய்திகள்

சமூக விலகல் கடைபிடிக்கப்படுகிறதா? காய்கறி மார்க்கெட், உழவர் சந்தையில் அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுத்திட பொதுமக்களின் வசதிக்காக இடைவெளியில் கூடிய (சமூக விலகல்) தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகள் செயல்படுவதை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா வைரஸ் நோய் தடுப்பதற்காக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழு வீச்சுடன் செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், கிருமி நாசினி தெளித்தும், முகத்திற்கு மாஸ்க் அணிவிக்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி காய்கறிகளை வாங்க வேண்டும் என்றும், வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் பழைய பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டாக செயல்படுகிறது. இதனை நேற்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பார்வையிட்டு மக்கள் கூட்டமாக கூடாமல் இடைவெளி (சமூக விலகல்) விட்டு காய்கறி வாங்குவதை பார்வையிட்டும், மக்களுக்கு தேவையான அனைத்து காய்கறிகளையும் சிரமமின்றி பெறுகிறார்களா என பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து வேலூர் டோல்கெட்டில் செயல்பட்டு வந்த உழவர் சந்தையானது தொரப்பாடி அரசினர் மேல்நிலை பள்ளியில் செயல்பட்டு வருவதை அமைச்சர் நேரடியாக சென்று அங்கு காய்கறி விற்பனை செய்பவர்களிடம் அதிக விலையில் விற்பனை செய்ய கூடாது எனவும், காய்கறி வாங்க வந்தோர்களிடமும் காய்கறிகளின் விலைகளை பற்றியும் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் காட்பாடி டான்பாஸ்கோ பள்ளியில் செயல்படும் உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் இடைவெளி விட்டு காய்கறி வாங்க வேண்டும் என்றும், காய்கறிகள் விற்பனை செய்பவர்களிடமும், காய்கறி வாங்க வருபவர்களிடமும் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும், கொரோனா தடுப்பிற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மணிவண்ணன், வட்டாட்சியர்கள் (வேலூர்) சரவணமுத்து, (காட்பாடி) பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.