தற்போதைய செய்திகள்

போரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் – அமைச்சர் பா.பென்ஜமின் தகவல்

திருவள்ளூர்

போரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் பா.பென்ஜமின் தெரிவித்துள்ளார்.

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வளசரவாக்கம் 11-வது மண்டல அலுவலகத்தில் ஊரகத்தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் மண்டல அலுவலர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

சுமார் 2 மணி நேர ஆலோசனையின் முடிவில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் சுத்தமான முறையில் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் ஊழியர்களை வைத்து கிருமிநாசினி கலவை தெளித்து எந்த வகையிலும் கொரோனா தொற்று பொது மக்களை பாதிக்காத வகையில் அதிகாரிகள் முதல் ஊழியர்களை சேவை செய்ய வேண்டும் என்று அதிகாரியிடம் அறிவுறுத்தினார். பின்னர் சுகாதாரத்துறை தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை குறித்து உணவு செய்யப்படும் இடத்திற்கு சென்று ஆய்வு செய்து தரத்தை பரிசோதனை செய்து சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

அதன்பின்னர் கிருமிநாசினி கருவிகளை முதுகில் மாட்டிக்கொண்டு சுமார் 10-க்கும் மேற்பட்ட தெருக்களில் வீதிவீதியாக சென்று வீடு வீடாக கிருமி நாசினியை அமைச்சர் தெளித்தார். அமைச்சர் கிருமி நாசினி மருந்து தெளிப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அமைச்சரையும், கழக அரசையும் வெகுவாக பாராட்டினர்.

பின்னர் அமைச்சர் பா.பென்ஜமின் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் பரவி வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடியார் கூறியது போல மக்கள் விழித்திரு விலகி இரு, வீட்டில் இரு, என்ற வாசகத்திற்கு ஏற்ப இருக்கும் பட்சத்தில் கொரோனா வைரசை நாம் முற்றிலும் ஒழித்து விடலாம். மேலும் கொரோனா வைரஸ் பரவும் பட்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போரூரில் கட்டப்பட்டு வரும் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டுமானம் பணி முடிந்து விரைவில் திறப்பு விழா காண இருக்கிறது.

இந்த மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என சுமார் 40 சிறப்பு படுக்கைகள், கொண்ட சிறப்பு மருத்துவ உபகரணங்களுடன் கொரனா தீவிர சிகிச்சை மையம் செயல்படுத்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், இணைந்து 40 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கும் பணி உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் விரைவாக நடைபெற்று வருகிறது.

மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 11-வது மண்டலத்தில் நேபாளத்திலிருந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் முதலமைச்சர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது எப்பேர்பட்ட சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் அரசாகவும், அதில் வெற்றிபெறும் அரசாகவும் அம்மாவின் அரசு உள்ளது .

மேலும் 144 தடை உத்தரவை மதித்து பெரும்பாலான பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே உள்ளனர். ஒரு சிலர் அத்தியாவசிய பணிக்காக வருகிறார்கள். அத்துமீறி வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கையையும் காவல்துறை எடுத்து வருகிறது. எனவே பொதுமக்கள் தாங்களாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அரசின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்,

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் கூறினார்.

இந்த ஆய்வின் போது மண்டல அதிகாரி சசிகலா மற்றும் செயற்பொறியாளர்கள் உடனிருந்தனர்.