தற்போதைய செய்திகள்

ரூ.1000, ஏப்ரல் மாதத்திற்குரிய ரேஷன் பொருட்கள் சுழற்சி முறையில் வழங்கப்படும் – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

திருவாரூர்

ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் ஏப்ரல் மாதத்திற்குரிய அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட ரேஷன்பொருட்கள் சுழற்சி முறையில் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் மன்னார்குடி பேருந்து நிலைய வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தையை அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தர். அப்போது வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் அமைச்சர் ஆர்.காமராஜ் முககவசம் சோப்பு உள்ளிட்டவற்றை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

144 தடை உத்தரவை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். 21 நாட்கள் மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்தால் கொரோனாவை விரட்டி விடலாம். திருவாரூர் மாவட்டம் முழுவதும் 29 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 14 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மருத்துவ கல்லூரியில் கூடுதலாக 200 படுக்கைகளும், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 250 படுக்கைகளும், 17 தனியார் மருத்துவமனைகளில் 602 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.

மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க விசாலமான இடத்தில் சந்தைகள் மாற்றப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வந்து உள்ளவர்கள் என 2364 பேர் கண்டறியப்பட்டு அதில் 1900 பேர் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் ஏப்ரல் மாதத்திற்கு உரிய அரிசி, பருப்பு, எண்ணெய் பணம் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் சுழற்சி முறையில் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் தரைக்கடை வியாபாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை மற்றும் முக கவசம், கை கழுவும் சோப் உள்ளிட்டவற்றை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார். மேலும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வீடு இல்லாமல் உள்ள ஆதரவற்ற ஆண் பெண் ஆகியோருக்கு மதிய உணவு வழங்கினார்.

தொடர்ந்து நன்னிலம் பேருந்து நிலையம் பேரளம் உள்ளிட்ட பகுதிகளில் வைரஸ் நோய்த் தடுப்பு பணிகளில் ஈடுபடுவோருக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், திருவாரூர் நகராட்சி ஆணையர் சங்கரன், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.