தற்போதைய செய்திகள்

கொரோனா வைரஸ் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை அமைச்சர்கள் அறிவுறுத்தல்

ஈரோடு

பொதுமக்கள் கொரோனா வைரஸ் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவனிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் தெரிவித்ததாவது, 

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி வியாபாரிகளின் கோரிக்கைகளை ஏற்று நேதாஜி காய்கறி சந்தை மற்றும் பழங்கள் விற்பனை ஆகியவற்றில் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக மத்திய பேருந்து நிலையத்திலும், சம்பத் நகர் மற்றும் பெரியார் நகர் பகுதியில் இயங்கிவரும் உழவர் சந்தைகள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (ஜிடிஎஸ்) வளாகத்திலும் இயங்கி வருகிறது.

பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கவும், அத்தியாவசிய பொருட்களை நுகர்வு செய்யவும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் அத்தியாவசியப் பொருட்கள் பொது மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க வாகனங்களுக்கு அனுமதி பெறுவதற்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, பெருந்துறை, கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், நம்பியூர், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி ஆகிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் நடமாடும் அம்மா பண்ணை பசுமை கூட்டுறவு அங்காடி காய்கறி விற்பனை ரயில்வே காலனி, கருங்கல்பாளையம், சோலார், திண்டல், சூரம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 7 மணி முதல் 11 மணி வரை சலுகை விலையில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சுல்தான்பேட்டை, கொல்லம்பாளைம் மற்றும் மாவட்டம் முழுவதும் 16,456 குடும்பங்கள் 57,734 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், அவர்கள் இருக்கும் இடத்திற்கே மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அடுத்து வரும் நாட்கள் முக்கிய சவாலான நாட்கள் ஆகும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளி ஆட்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்திற்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தை, சேர்ந்தவர்கள் உறவினர் களாகவோ அல்லது சுற்றுலா பயணிகளாகவோ வருகை புரிந்தால் உடனடியாக வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் அவ்வாறு தகவல் கொடுக்காதவர்கள் மீது பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் கொரோனா வைரஸ் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.

கொரோனா வைரஸ் பற்றி சமூகவலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்தனர்.