சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டால் எந்த பயனும் இல்லை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம்

கோவை

ஆளும் கட்சியால் மட்டுமே திட்டங்களை செயல்படுத்த முடியும். எனவே தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டால் எந்த பயனும் இல்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட ஆழங்கொம்பு, பெத்திகுட்டை, கணுவாய் பாளையம் பிரிவு, தாயனூர் ஆகிய இடங்களில் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்கள் பிடி.கந்தசாமி, சங்கீதா ஆகியோரை ஆதரித்தும், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டிபாளையம், கோட்டைபாளையம், கீரணத்தம், வெள்ளானப்பட்டி ஆகிய இடங்களில் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் அபிநயா ஆறுக்குட்டி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்களை ஆதரித்தும் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க வேண்டும். எப்படியாவது முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்பதே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு எண்ணமாகும்.கழக ஆட்சி 3 மாதத்தில் கலைந்துவிடும், 6 மாதத்தில் கலைந்து விடும் என்று பகல் கனவு கண்டு அவதூறு பிரச்சாரம் செய்தார். ஆனால் மூன்று ஆண்டுகளை தாண்டி சிறப்பான ஆட்சியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தந்து கொண்டிருகு்கிறார். கிளை செயலாளராக இருந்து படிப்படியாக உயர்ந்து தமிழக முதல்வராகியுள்ளார்.

ஆனால் ஸ்டாலின் அப்படியல்ல. ஏழைகளுக்காக பேரறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட திமுகவில் கட்சிக்காக உழைத்தவர்களை வெளியேற்றிவிட்டு இன்று கருணாநிதியின் குடும்ப சொத்தாக்கி விட்டது. வாரிசு அடிப்படையில் திமுகவின் தலைவராகி விட்டார் மு.க.ஸ்டாலின்.ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கோ, கோவை மாவட்டத்திற்கோ எந்த ஒரு நன்மையும் திமுக செய்யவில்லை.

ஆனால் புரட்சித்தலைவி தலைமையிலான கழக அரசு தமிழக மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை தந்து சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறது. இதற்காக மத்திய அரசின் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது.மூன்று மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 70 ஆண்டுகால பிரச்சினையான அத்திக்கடவு- அவிநாசி திட்டத்திற்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார். இரண்டாம் திட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம், காரமடை, தொண்டாமுத்தூர் ஒன்றியங்களில் உள்ள குளம், குட்டைகள் அனைத்தும் பயன்பெறும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. சாலை வசதிகள், பாதாள சாக்கடை திட்டம், பாலங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுகவினர் சட்டசபை யாகட்டும், நாடாளுமன்றம் ஆகட்டும் தொகுதிக்கு தேவையான எந்த ஒரு திட்டங்களையும் பெற முயற்சி செய்யாமல் வெளிநடப்பு ஒன்றையே செய்து வருகிறார்கள்.மேலும் தேர்தல் நேரத்தில் மட்டுமே பொதுமக்களை சந்திக்கும் திமுகவினர் வெற்றி பெற்ற பிறகு மக்களை சந்திக்க வர மாட்டார்கள். திமுக வேட்பாளர்களுக்கு போடும் ஓட்டு உபயோகமற்றதாகி விடும்.

 

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார்.

பிரச்சாரத்தின் போது மாநகர் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., கழக அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ் எம்.பி., மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓகே.சின்ராஜ், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஏ.நாசர், திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கே.ஆர்.ஜெயராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர். சசிகுமார் உள்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.