தற்போதைய செய்திகள்

விழுப்புரத்தைசேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

விழுப்புரம்

விழுப்புரத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சட்டங்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று விழுப்புரம் ஆட்சியர் வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட விழுப்புரத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் அவர்கள் தங்கியிருந்த விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 6,7,8 ஆகிய வார்டுகள் முழுமையாக வெளிநபர்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம் நகராட்சியில் உள்ள 43 தெருக்களில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

1678 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வசிக்கும் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சென்றவர்கள் மற்றும் 17 பேர் அதில் 10பேர் இன்னும் டெல்லியிலேயே இருந்து வருகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.