தற்போதைய செய்திகள்

ஆதரவற்ற 1200 பேருக்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆதரவற்ற 1200 நபர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ஓ,எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக மேற்கொள்ளப் பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ,எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன் பி.நாயர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியுள்ளவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுடன் வீடியோ கான்பரன்ஸிங் வாயிலாகவும் கலந்துரையாடி நோய் தொற்றின் நிலை குறித்து அவ்வப்போது கண்காணிப்படுகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 10 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, அவர்களது இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, சோதனை முடிவுகளுக்குப் பின் அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஆதவற்றோர் 1200 நபர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. வெளியிலிருந்து சுற்றுலா வந்தவர்கள் 44 நபர்கள் வேளாங்கண்ணியில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாத வண்ணம் அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்தல், ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஒலிபரப்புதல், வெளியூர்களிலிருந்து வந்துள்ளவர்களை தொடர்ந்து கண்காணித்தல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள நபர்கள் சுயமாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, நோய் அறிகுறி வருகிறதா என கண்காணித்து அரசு மருத்துவமனை மூலமோ, அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மூலமோ மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு நோய் பாதிப்பு உறுதியானால் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் தொற்று ஏற்படாத வண்ணம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது போன்ற நடவடிக்கை இந்த கடுமையான தொற்று நோய் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும், மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க பேருதவியாக இருக்கும். பொதுமக்களை நான் கைகூப்பி வணங்கி கேட்டுக்கொள்வது என்னவென்றால், தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்படும்; கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தங்கள் முழுஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையினை அமைச்சர் ஓ,எஸ்.மணியன் நேரில் பார்வையிட்டார்.