தற்போதைய செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எவருக்கும் இல்லை – அமைச்சர் பா.பென்ஜமின் தகவல்

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எவருக்கும் இல்லை என்றும், 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பா.பென்ஜமின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி, கலைபண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் பா.பென்ஜமின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சரின் ஆணை மற்றும் அறிவுறுத்தல்களுக்கிணங்க திருவள்ளுர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் துரிதமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் அறிவுறுத்தல்களின்படி மாவட்ட நிர்வாகம் சார்பாக மக்களுக்கு முழு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

15 மாநில எல்லைகள் மற்றும் 20 மாவட்ட எல்லைகள் ஆகிய இடங்கள் மூடி வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெளி மாநில மக்கள் உள்நுழையாமலும், மாவட்டத்தில் உள்ள மக்கள் வெளியில் செல்லாமலும் கண்காணிக்கப்படுகின்றனர்.

மேலும், மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, பொது சுகாதாரம், காவல், ஊரக உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி ஆகிய துறைகளை சேர்ந்த 12896 நபர்கள் கள பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 9 வட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக துணை ஆட்சியர் அளவிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக போதிய கிருமிநாசினிகளும், தடுப்பு உபகரணங்களும், டெட்டால் 619 லிட்டர், லைசால் 16445 லிட்டர், பிளிச்சிங்க் பவுர் 2395.5 மெ.டன், சோடியம் ஹைபோ குளோரைட் 1523 லிட்டர், என அனைத்தும் போதுமான அளவு இருப்பில் உள்ளது. 350 மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு 48000 எண்ணிக்கையில் முக கவசங்கள் தயரிக்கப்பட்டு, தற்போது வெளியில் இருந்து பெறப்பட்டதையும் சேர்த்து 54000 முக கவசங்கள் இருப்பில் உள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர் களுக்காக 690 படுக்கைகளும் 46 வெண்டிலேட்டர்களும், தயார் நிலையில் உள்ளது. 58 நபர்கள் 28 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டாம் கட்டமாக. 1955 தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு அறிவிப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகின்றது.

திருவள்ளூர் மற்றும் ஆவடி பகுதிகளில் 67 நபர்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு போதிய அத்தியாவசிய அடிப்படைகள் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறியதாக 556 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2 நபர்கள் மீது சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்திலுள்ள மொத்தம் உள்ள 1134 நியாய விலைக்கடைகளில் அத்தியவசிய பொருட்கள் மற்றும் நிவாரண நிதியினை வழங்கிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடவடிக்கைள் மேற்க்கொள்ளப் பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் www.stopcoronatiruvallur.com என்ற இணையதளம் வாயிலாக கொடையாளர்கள் பொருட்களை தானமாக வழங்கவும், அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுபவர்களும் இந்த இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு ஆன்ட்ராய்டு செயலியினை தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை வீடுகளில் கண்காணிக்க பிரத்யேகமாக வடிவமைத்து செயல்பாட்டுக்கு வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை திரட்டி உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரகத்தில் முழு நேரக் கட்டுப்பாட்டு அறை (24X7) ஏற்படுத்தப்பட்டு, பணியாளர்கள் முழு நேரமும் பணியாற்றி வருகிறார்கள்.

இக்கட்டுப்பாட்டு அறையில் சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு அனைவரும் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினரும் நோய் பரவுதலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு முக்கியமாக வெளிநாடுகளிலோ அல்லது வெளிமாநிலங்களில் இருந்து வருகை புரிந்தவர்கள் உள்ளூர் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு அறை 04427664177, 04427666746, வாட்ஸ்ஆப் 9444317862 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எவருக்கும் இல்லை.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் தெரிவித்தார்.

பின்னர், அமைச்சர்கள் பா.பென்ஜமின், க.பாண்டியராசஜன், மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சுகாதார மாவட்ட 24 மணி நேர அவசர கட்டுப்பாடு அறையினை நேரில் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்து கொண்டனர். அரசு அலுவலக வளாகத்தில் கிருமிநாசினிகளை தெளித்தனர்.