தற்போதைய செய்திகள்

திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரேனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அறையை உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அறையை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் எம்.துரை ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்ததாவது:-

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசால் துரிதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மத்திய, மாநில அரசின் உத்தரவுகளின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு அதில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் சரியாக கிடைக்கிறதா என்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அரசின் ஊரடங்கு உத்தரவினை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று மக்களுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க வேண்டுமென்றால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டில் தங்களை தனிமைப் படுத்தி கொள்வதே சரியான வழியாகும்.

மாவட்ட நிர்வாகம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. சுகாதாரத்துறை, காவல்துறை, தூய்மை பணியாளர்கள், வருவாய் துறை உள்ளிட்டத்துறை அலுவலர்கள் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இப்பணிகளை மேலும் சிறப்பாக செய்திட வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அந்த வகையில், கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான சந்தேகங்களை பொதுமக்கள் கேட்டறிய மாவட்ட ஆட்சியரகத்தில் பிரத்யேகமாக கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுப்பாட்டு அறையில் 5 மருத்துவர்கள் சுழற்சி முறையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். பொதுமக்கள் இக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள: 04366-226050, 226060, 226080, 1077, 226623 ஆகிய தொலைபேசி எண்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இவ்ஆய்வில் கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகுமரன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜமூர்த்தி, துணை இயக்குநர் விஜயகுமார், வருவாய் கோட்டாட்சியர்கள் ஜெயபிரீத்தா, புண்ணியக்கோட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.