தற்போதைய செய்திகள்

வீட்டிற்கே தேடிச் சென்று முதியோர் ஓய்வூதியத் தொகை: அமைச்சர் உதயகுமார் அறிவுரை

சென்னை

முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் பயனாளிகளுக்கான ஓய்வூதியத் தொகையை வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்குவதற்கு வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அறிவுரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அனுப்பிய சுற்றறிக்கையில், தமிழ்நாட்டில் மாதம்தோறும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகைகளஅஞ்சலக மணியார்டர் மூலமாகவும், வங்கிக் கணக்கின் மூலமாகவும் வழங்கப்பட்டுவருகிறது. இவ்வாறு, மாதம்தோறும் மொத்தம் 32 லட்சத்து 45 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா ரூ. 1000 வழங்கப் படுகிறது.

ஆனால்,தற்போது நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், முதியோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்பு ஏற்பாடாக அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நேரடியாக உதவித் தொகையை வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, அனைத்து பயனாளிகளுக்கும் அவர்களின் வீட்டிற்கே சென்று உதவித்தொகை வழங்க சம்மந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர், வட்டாட்சியர், வங்கி சேவையாளர்கள், தபால் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுரை வழங்க வேண்டும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.