சிறப்பு செய்திகள்

வெளி மாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது – தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை;-

வெளி மாநில தொழிலாளர்கள் ,மாணவர்களிடம் வீடு வாடகையை வசூல் செய்யக்கூடாது. வற்யுறுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில் இந்த உத்தரவை திறம்பட செயல்படுத்துவதற்காகவும், புலம் பெயர்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாத வகையில் அவர்களின் பொருளாதார நின்னல்களை போக்கும் வகையிலும் சில கூடுதல் நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் வெளி மாநிலத் தொழிலாளர்கள், ஏழை மற்றும் எளிய மக்கள் தங்குவதற்கு இடமில்லாமல் இருந்தால் அவர்களுக்கு உரிய தங்குமிடத்தையும், உணவு வசதியையும் மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.

வெளி மாநிலங்களைச் சேர்ந்த மக்களாக இருந்தால் அவர்களுக்கு உரிய தங்குமிடங்களை மாவட்ட ஆட்சியர்களும், சென்னையாக இருந்தால் மாநகராட்சி ஆணையாளரும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகளை ஊடரங்கு அமலில் உள்ள காலம் வரை மேற்கொள்ள வேண்டும்.

தொழில் நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் உரிய முழுமையான ஊதியத்தை சம்பந்தப்பட்டநிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். ஊடரங்களால் மூடப்பட்டிருந்தாலும் ஊழியர்களுக்கு எந்தவித பிடித்தமும் செய்யாமல் ஊதியத்தை அளிக்க வேண்டும்.

வெளி மாநிலத் தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களும். வாடகைக் கட்டடத்தில் தங்கியிருக்கலாம். அப்படி இருக்கும் நிலையில், அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் சுமார் ஒரு மாத காலத்துக்கு வாடகையைக் கோரி நிர்பந்திக்கக் கூடாது. இவ்வாறு வாடகைக் கட்டடத்தில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை காலி செய்யுமாறு வற்புறுத்தினால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.