தமிழகம்

காவல்துறையை ஏமாற்றலாம்; கொரோனாவை ஏமாற்ற முடியாது -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை

ஊரடங்கை மதிக்காமல் காவல்துறையை ஏமாற்றலாம்; கொரோனாவை ஏமாற்ற முடியாது
என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தமிழக முதல்வர் அறிவுரைப்படி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகாக மாநில பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து அத்தியாவசிய பணிகளுக்காக வெளியில் செல்லும்
பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி . உதயகுமார் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இரவு பகலாக உழைக்கும் முதல்வர்

இரவு பகலாக முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை,ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை,மக்கள் பாராட்டுகின்ற நடவடிக்கைகளை ஊடகங்கள் பாராட்டுகின்ற நடவடிக்கைகளை,இரவு பகலாக விழித்திருந்து,ஒவ்வொரு துறை வாரியாக,நேரில் ஆய்வு செய்து,மத்திய அரசு அளிக்கக்கூடிய அறிவுரைகளையும்,வழிகாட்டுதல்களையும்,முழுமையாக பெற்று,பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

37 வருவாய் மாவட்டங்களிலும்,144 தடை உத்தரவில் இதனுடைய முக்கியத்துவத்தை புரியாமல்,வெளியே வருகின்ற மக்களுக்கு ,அறிவுரை வழங்கி,அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,பல்வேறு நடவடிக்கையை எடுத்துவருகிறார்.இதில் எங்களுடைய பேரிடர் மீட்புப்படை, அம்மாவின் காலத்தில் மீட்பு படைக்காக முதல் முதலில் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தேசிய பேரிடர் மீட்புப்படையை முன் மாதிரியாக வைத்து இந்த படை உருவாக்கப்பட்டு இதன் காமாண்டராக மகேஷ் அகல்வால் செயல்படுகிறார்.

விழிப்புணர்வு வேண்டும்

தற்போது கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,அனைத்து துறைகளும் ஈடுப்பட்டுவருகிறார்கள்.அதில் வருவாய்த்துறையும்,பல்வேறு பணிகளுக்கு இடையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்கள்.இதில் நம்முடைய பேரிடர் மீட்பு படை இத்தனை நாட்களாக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைக்காக சீருடை அணியாமல் பணிகளை மேற்கொண்டுவந்தார்கள்.தற்போது மக்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கும் வகையில்,இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று முதலமைச்சர் அளித்த அறிவுரையின் அடிப்படையில் மாநில பேரிடர் மீட்பு படையினர் மூலம் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்லும் பொது மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இன்று சென்னையில் எழிலகம் அருகே உழைப்பாளர் சிலை அருகே விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

மாநில தேசிய மீட்புப்படை தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பு பணிக்காக பிரித்து அனுப்பப்பட்டுள்ளது, சென்னைக்கு 80 பேரும், மதுரைக்கு 80 பேரும், திருச்சிக்கு 40 பேரும், திருநெல்வேலிக்கு 80 பேரும், கோவைக்கு 80 பேரும் மற்றும் மற்ற மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பேரிடர் மேலண்மைக்காக உருவாக்கப்பட்ட 43,404 முதல்நிலை மீட்பாளர்களையும் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆங்கங்கே விழிப்புணர்வு இல்லாமலே மக்கள் வெளியே வரும்போது, இந்த வைரஸ் குறித்த வீரியத்தை எடுத்துகூறி, நமக்கே தெரியாமல் நாம் வெளியில் வரும்போது, இந்த தொற்று பரவுகிறது என்கின்ற, என்ற விழிப்புணர்வு பணியை உழைப்பாளர் சிலை அருகே தொடங்கிவைத்துள்ளோம்.

சுய தனிமை அவசியம்

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்த படை பிரிவினர் பிரித்து அனுப்பட்டுள்ளனர். சுய தனிமை குறித்த அவசியத்தையும், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று வெளியே வருபவர்களும் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். இந்த சுய தனிமைதான் இதற்கு ஒரே தீர்வு, என்பதின் அடிப்படையில் இந்த விழிப்புணர்வு பணியை முதலமைச்சரின் அறிவுறுத்தலோடு தொடங்கிவைத்துள்ளோம்.இந்த பணியில் ஆயிரம் பேரிடர் படையினரும், ஏறத்தாழ 43 ஆயிரம் முதல் நிலை மீட்பாளர்களும், அந்ததந்த மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலோடு, சோதனை சாவடிகளில் முதலமைச்சரின் விரிவான அறிவுரையை துண்டு பிரசுசரமாக பேரிடர் மேலாண்மைதுறை சார்பில் வேண்டுகோளாக வெளியிட்டுள்ளோம். நாளை ( இன்று) முதலமைச்சர் அறிவித்த ரேஷன் கார்டுக்கு ஆயிரம் அளிக்கப்படவுள்ளது.இதனை வாங்க வரும் மக்களுக்கு டோக்கன் வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை பெற்றுக்கொள்ள வருபவர்கள் யாராக இருந்தாலும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கடவுளின் பரிசு

கடவுள் நமக்கு பரிசாக அளித்துள்ள இந்த உயிரை காப்பற்றுவதற்கு, இந்த சமூக
இடைவெளியை பின்பற்றியே ஆகவேண்டும்.நாம் காவல்துறையை,வருவாய்துறையை,எந்த துறையை வேண்டுமானும் ஏமாற்றிவிட்டு நாம் வெளியே வர முடியும். ஆனால் கொரோனா வைரஸை ஏமாற்றி தப்பிக்க முடியாது. என்ற அந்த விழிப்புணர்வை மக்கள் பெற்றாலே, நாம் 100 சதவீதம் காப்பாற்ற முடியும்.என்றார்.தொடர்ந்து செய்தியாளர்கள் முதியோர் உதவித்தொகை குறித்து கேள்வி எழுப்பினர்.இதற்கு அமைச்சர் உதயகுமார்

வீடு  தேடி உதவி

முதியோர் உதவி தொகையை பொறுத்தவரை 1 ம் தேதி முதல் 3 ம் தேதி வரை அந்தந்த மாவட்ட கருவூலங்களுக்கு அனுப்புவோம். 5 ம் தேதிக்குள் கருவூலத்தில் வரவு வைக்கப்பட்டு,இதனை தொடர்ந்து 10 ம் தேதியிலிருந்து வழங்கக்கூடியவகையில்,அதிகபட்சமாக 15 ம் தேதிக்குள்ளாக வழங்கப்பட்டுவருகிறது.இது இரண்டு விதமாக அளிக்கிறோம்.வெளியே வரமுடியாத முதியோர்கள்,மாற்று திறனாளிகள் என 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு,தபால் நிலையத்தின் மூலமாக ஏற்கனவே அளித்துவருகிறோம்.மற்ற 30 லட்சம் பேருக்கு வங்கிகள் மூலம் அளிக்கிறோம்.தற்போதைய நிலையை கருத்தில்கொண்டு,32 லட்சத்து 30 ஆயிரம் பேர்களுக்கு வீடுகளுக்கே செல்லவேண்டிய சூழ்நிலை இருக்கும் காரணத்தினால்,வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.இதற்கான நடவடிக்கை எந்த அளவுக்கு உள்ளது என்பதை நாங்கள் கண்காணித்துவருகிறோம்.இது நல்ல பலனை தரும் என்ற நம்பிக்கை உள்ளது.என்று பதில் அளித்தார்.உடன் வருவாய் துறை
கூடுதல் தலைமை செயளர் அதுல்ய மிஸ்ரா ,வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், மாநில பேரிடர் மீட்பு படை தலைவர் மகேஸ்குமார் அகர்வால் ஆகியோர் உடன் இருந்தனர்.