தமிழகம்

ஆட்சியர்கள் மட்டுமே அவசர பாஸ் வழங்கலாம்: தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை,

ஆட்சியர்கள் மட்டுமே அவசர பாஸ் வழங்கலாம் என்று தலைமைச் செயலாளர் கே.சண்முகம்
உத்தரவிட்டுள்ளார்

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து நகராட்சி ஆணையாளர்களுக்கு தலைமை செயலாளர் கே.சண்முகம்  அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது

அவசர பயணம்

தமிழகத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் அவசர பயணத்தை மேற்கொள்ள அனுமதிச் சீட்டுகள் வழங்கும் அதிகமாரமானது மாவட்டங்களில் ஆட்சியர்களிடம் இருந்தும், சென்னை மாநகராட்சியில் ஆணையாளரிடம் இருந்தும் முறையே வட்டாட்சியர்கள், துணை ஆணையாளர்களிடம் வழங்கப்பட்டிருந்தது.

முதல்வர் உத்தரவு

இந்த நடைமுறைகளில் அரசுக்கு திருப்தி ஏற்படவில்லை. மக்கள் பலரும் சாலைகளில் செல்லும் நிலை காணப்படுகிறது. முதல்வர் பழனிசாமியின் உத்தரவைத் தொடர்ந்து அனுமதிச் சீட்டு வழங்கும் நடைமுறையில் உடனடியாக மாற்றம் கொண்டு
வரப்படுகிறது.

மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த

திருமணம், மருத்துவமனைகள் செல்வது, இறப்பு போன்ற நிகழ்வுகளுக்குச் செல்லும் போது தனி உதவியாளர் (பொது) மூலமாக ஆட்சியரிடம் இருந்து அனுமதியைப் பெற வேண்டும். இதேபோன்று சென்னை மாநகராட்சியில் ஆணையாளரிடம் இருந்து மட்டுமே அனுமதிச் சீட்டுகளைப் பெற முடியும். பொது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இத்தகைய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவித்துள்ளார்.