சிறப்பு செய்திகள்

சட்டம் கடுமையாக்கப்படும்: முதல்வர் அதிரடி

சென்னை
சட்டம் கடுமையாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (3.4.2020) சென்னை, குருநானக் கல்லூரியில் மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத வெளிமாநிலத்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமை பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :-

பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

வெளிமாநில தொழிலாளர்கள்

இன்றையதினம் உலகையே உறைய வைக்கக்கூடிய கொடிய கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி உள்ளது. இந்தியாவிலும், பல்வேறு மாநிலங்களில் இந்த வைரஸ் நோய் பரவியுள்ளது. தமிழகத்திலும் இந்த கொடிய வைரஸ் நோய் பரவுவதன் காரணமாக பலர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்தச் சூழ்நிலையில் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வந்து பணிபுரிந்து கொண்டிருக்கின்ற தொழிலாளர்களின் நலன் கருதி அம்மாவுடைய அரசு அவர்களுக்குத் தேவையான தங்குமிடம், உணவு, மருத்துவ வசதிகளைச் செய்து கொடுத்திருக்கின்றது. ஒடிசா, மேற்கு வங்காளம், அசாம், ஜார்க்கண்ட், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வருகை தந்து பணிபுரிந்து கொண்டிருக்கின்ற தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை எங்களுடைய அரசு செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது.

மாநில அரசுகள் ஆலோசனை

அந்த வகையில், இன்றைய தினம், மூன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்ற வெளிமாநிலத் தொழிலாளர்களை நாங்கள் சந்தித்து, அவர்களுக்கு அரசு எந்தெந்த வகையில் உதவிகள் செய்கின்றது என்ற விவரங்களை எல்லாம் நேரடியாக நான் கேட்டறிந்தேன். ஊடக மற்றும் பத்திரிக்கை நண்பர்களும் நேரிலே வந்திருக்கின்றீர்கள். பாரதப் பிரதமர் வலியுறுத்தியபடி, எந்தெந்த மாநிலத்திலே, வேறு மாநிலங்களிலிருந்து வந்து பணிபுரிகின்றார்களோ, அவர்களுக்கு அந்தந்த மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டுமென்று ஆலோசனை வழங்கினார்கள். அந்த ஆலோசனையை ஏற்று, மாண்புமிகு அம்மாவின் அரசு தமிழகத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வருகை தந்து பணிபுரிகின்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் தேவையான தங்கும் வசதி, உணவு, மற்றும் மருத்துவ வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் அனைத்து வசதி

கேள்வி: பாரதப் பிரதமருடன் காணொலிக் காட்சியில் நீங்கள் என்ன பேசினீர்கள் என்பது தொடர்பாக…

பதில்: பாரதப் பிரதமருடன் பேசியது அனைத்து தொலைகாட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வந்துள்ளது. நாங்கள் எடுத்து வைத்த கோரிக்கைகளை அவர்கள் பரிசீலிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

இன்றைக்கு வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வருகை தந்து தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 1,18,336. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரிகின்ற பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 3,409. உணவுக் கூடங்களில் பணிபுரிந்து வருகின்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் 7,871. விவசாயப் பண்ணைகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 4,953. ஆக, பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து பல்வேறு தொழில் புரிகின்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 1,34,569.  அதேபோல, தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்குச் சென்று பணிபுரிந்து வருகின்ற நம்முடைய மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 7,198. தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குச் சென்று தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றவர்கள், மேலும் பல்வேறு நிலைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற தொழிலாளர்கள், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அந்தந்த மாநில முதலமைச்சர்களைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தமிழகத்திலிருந்து சென்று பணிபுரிகின்ற அந்த தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

அத்தியாவசியப் பொருட்களுக்கு தடை இல்லை

கேள்வி: பொதுப் போக்குவரத்து இல்லாத காரணத்தினால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து இருக்கின்றதே, வாகனங்கள் வருவதற்கான அனுமதி குறித்து?

பதில்: அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு வருவதற்கு எந்த தடையும் இல்லை, இதனை ஊடகம் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக தெளிவுபடுத்தி இருக்கிறோம். நமக்கு பல்வேறு மளிகைப் பொருட்கள் வேறு மாநிலங்களில் இருந்து வரவேண்டிய சூழ்நிலை இருக்கின்றது. பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வருகின்ற வாகனங்கள், அதாவது லாரிகள் அதிகமாக இயக்கப்படுவது இல்லை, அதனால் இந்த நெருக்கடி ஏற்பட்டு இருக்கின்றது. இருந்தாலும் பாரதப் பிரதமர் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்கு எந்த மாநிலங்களும் தடை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கின்றார்கள், அதனடிப்படையிலே இனி அது சரி செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நோயின் தாக்கத்தை மக்கள் உணரவேண்டும்

கேள்வி: ஊரடங்கு அமலில் இருக்கும்போது அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் அதிகமாக வெளியில் வந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு போதுமான நடவடிக்கைகளை அரசு எடுக்குமா?

பதில்: ஆரம்ப காலத்திலிருந்தே தடை உத்தரவு பிறப்பித்ததற்கு காரணமே ஒருவருக்கு ஒருவர், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். இது ஒரு கொடிய தொற்றுநோய். இந்தத் தொற்றுநோய் எந்தெந்த நாடுகளில் எவ்வாறு பரவியுள்ளது என்பதை அனைத்து தொலைகாட்சிகளிலும் தினந்தோறும் காண்பித்து கொண்டிருக்கிறீர்கள், மக்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இந்த நோயின் வீரியம் புரியாமல், தெரிந்து கொள்ளாமல், சிலர் விளையாட்டுத்தனமாக இரு சக்கர வாகனத்தின் மூலமாகவும், பலர் கார்களின் மூலமாகவும் வெளியில் பொழுதை கழித்து வருகிறார்கள். ஊடகம் மற்றும் பத்திரிக்கையின் வாயிலாக அரசு கேட்டுக் கொள்வதெல்லாம், இந்த நோயின் தாக்கம் எந்தளவிற்கு இருக்கிறது என்பதை மக்கள் உணரவேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டால் அதை குணப்படுத்துவதற்கு எந்த மருந்தும் கிடையாது என்பதை மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இன்றைக்கு உலகெங்கும் பரவி வருகின்ற இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கு, பரவாமல் இருப்பதற்கு அரசால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்

அதைத்தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி கேட்டுக் கொண்டு இருக்கின்றோம். ஊடகமும், பத்திரிகையும் இதை தெளிவாக எடுத்துரைத்து கொண்டு இருக்கிறீர்கள். ஆனாலும், சிலர் அதை பொருட்படுத்தவில்லை. இன்றைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் 144 தடை உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. நாங்களும் பொறுமையாக இருந்தோம். அனைவரும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும். 144 தடை உத்தரவு என்பது, மக்களை துன்புறுத்துவதற்காகவோ அல்லது அத்தியாவசிய பணிகளை தடை செய்யும் சட்டமல்ல. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக போடப்பட்ட சட்டம் தான் 144 தடை உத்தரவு. அதை மனதில் வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டு மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இன்றைக்கு ஒவ்வொரு குடும்பமும் அரசுக்கு முக்கியம். ஒவ்வொரு உயிரையும் காக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அதனடிப்படையில் தான், நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சுகாதாரத் துறையும், காவல் துறையும், வருவாய்த்துறையும், உள்ளாட்சித் துறையும் ஆங்காங்கே ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு இந்த நோயினுடைய தாக்கத்தைப் பற்றி எடுத்துரைத்து கொண்டு இருக்கிறது. ஆகவே, அனைத்து துறைகளுடைய நோக்கம், இந்த நோய் வராமல் தடுக்க வேண்டும், அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்ற விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி கொண்டு இருக்கின்றோம். ஆகவே தமிழக மக்கள், அரசு எடுக்கின்ற நடவடிக்கைக்கு இந்த தொற்று நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கு அனைவரும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

சட்டத்தை கடுமையாக்குவதை தவிர வேறு வழி இல்லை

கேள்வி: பொதுப் போக்குவரத்து இல்லாத காரணத்தினால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து இருக்கின்றதே?

பதில் – நீங்களே சொல்கிறீர்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்று. லாரியை விட வேண்டும் என்று சொல்கிறீர்கள். அந்த லாரியை விட்டால் பொருட்களை இறக்க வேண்டும். அதற்கு அவர்களை அனுமதிக்க வேண்டும். ஓட்டுநர்களை அனுமதிக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். இப்படி எல்லா தேவைகளையும் மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டியது அரசினுடைய கடமை. மக்கள் இதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வேண்டும் என்பதற்காக தினந்தோறும் கடைக்கு செல்லக் கூடாது. காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை வாங்க வேண்டும் என்றால், ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கி வீட்டிலே வைத்துக் கொண்டால், தினந்தோறும் வெளியில் வர வேண்டிய அவசியம் இல்லை.

மக்கள் கடைபிடிக்கவேண்டும்

ஆனால் மக்கள் தான் அதை கடைப்பிடிக்க வேண்டும். அரசாங்கத்தை பொறுத்தவரைக்கும், ஊடகத்தின் வாயிலாக, பத்திரிகையின் வாயிலாக தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு இருக்கின்றோம். நீங்களும் வலியுறுத்தி வருகிறீர்கள். இதை கடைப்பிடிப்பது மக்களின் கடமை. அதுமட்டுமல்ல, எவ்வளவு சொன்னாலும், சிலர் கேட்பது கிடையாது. ஆனால் இனிமேல் சட்டம் தன் கடமையை செய்யும். பொதுமக்களுக்கு எவ்வளவு தூரம் அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமோ, அந்தளவிற்கு அரசு ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. பொதுமக்கள் அந்த ஒத்துழைப்பை சரியான முறையிலே பயன்படுத்த தவறினால் அரசிற்கு 144 தடை உத்தரவை கடுமையாக்குவதை தவிர வேறு வழி கிடையாது என்பதை ஊடகத்தின் வாயிலாக, பத்திரிகை வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதம் இருக்கிறது. நம்முடைய மாநிலத்தினுடைய நிலைமை வேறு. மற்ற மாநிலத்தினுடைய நிலைமை வேறு. அந்தந்த மாநிலத்திற்கு தக்கவாறு தான் அந்தந்த முதலமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். நம்முடைய மாநிலத்திற்கு தக்கவாறு நம்முடைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வேறு மாநிலத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய குழு

கேள்வி – ரேஷன் கடைகளில் இருக்கக்கூடிய பொருட்களை தொடர்ச்சியாக கொடுத்து கொண்டு இருக்கிறோம். நம்முடைய மாநிலத்தில் இருப்பவர்கள் அண்டை மாநிலத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ரேஷன் பொருட்களுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில் – நாங்கள் ஏற்கனவே, தமிழகத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு சென்று பணிபுரிந்து வருகின்ற தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று அந்தந்த மாநில முதலமைச்சர்களோடு, அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு நம்முடைய அதிகாரிகள் பேசி வருகிறார்கள். இதற்கென்று தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. துறை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அவர் தொடர்ந்து பேசி வருகிறார். நம்முடைய தொழிலாளர்கள் பிற மாநிலத்தில் பாதிக்கப்பட்டால் உடனடியாக அந்த மாநில அரசுடன் பேசி அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிக் கொண்டு இருக்கின்றோம். அதுமட்டுமல்ல, பிற மாநிலத்தில் பணிபுரிகின்ற நம்முடைய தொழிலாளர்களுக்கு அவர்கள் உதவி செய்கின்ற தொகையும் நாங்கள் வழங்குவோம் என்று அறிவித்திருக்கின்றோம்.

தொற்றை தடுக்கும் வழியில் அரசு

அதேபோல, பிற மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் தங்கி தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய்யும் கொடுத்து கொண்டு இருக்கின்றோம்.
கேள்வி – தமிழகம் கொரோனாவில் 2-ஆம் கட்ட நிலையில் இருக்கிறதா? தற்போது வரை 309 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது சமூக பரவல் ஆகிவிட்டதா? பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த 3 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு யார் மூலமாக தொற்று வந்தது என்பதை முழுமையாக அறியாமல் உள்ளது.

அரசு ஊழியர்களின் சம்பளம்

பதில் – அரசு கண்டுபிடித்து கொண்டு தான் இருக்கிறது. இதை பரவாமல் தடுப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் அரசு செய்து கொண்டு இருக்கிறது.

கேள்வி – அண்டை மாநிலங்களான தெலுங்கானா, மஹாராஷ்டிராவில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் விகிதாச்சார அடிப்படையில் பிடித்தம் செய்துள்ளது. தமிழக அரசிற்கு அம்மாதிரி ஏதாவது திட்டம் இருக்கிறதா?
பதில் – இன்றைக்கு தமிழகத்தை பொறுத்தவரைக்கும் தொழிற்சாலைகள் பெரும்பாலும் இயங்கவில்லை. ஒரு சில தொழிற்சாலைகள் தான் இயங்கி வருகின்றன. பெரும்பாலான பெரிய நிறுவனங்களும் இயங்க வில்லை. ஏற்கனவே 144 தடை உத்தரவு போடப்பட்டு மூடப்பட்டு இருக்கின்றன. திரையரங்குகளும் மூடப்பட்டு இருக்கின்றன. ஆகவே, அரசிற்கு வருகின்ற வருவாய் ஜி.எஸ்.டி. கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரைக்கும் அரசு ஊழியர்கள் பெறுகின்ற சம்பளம் தற்போது பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

நடவடிக்கை

கேள்வி – மளிகைப் பொருட்கள் பதுக்கல் செய்யப்பட்டு கூடுதல் விலைக்கு நிறைய இடங்களில் விற்கப்படுகின்றன, அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?
பதில் – ஏற்கனவே நம்முடைய உயர் அதிகாரிகள் வியாபாரிகள் சங்கத் தலைவர்களோடு தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசி, யாராவது அதிக விலைக்கு விற்பனை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றோம். அந்த வியாபாரச் சங்கத் தலைவரும் பத்திரிகை வாயிலாக இதுகுறித்து செய்தி வெளியிட்டிருந்தார். தவறு செய்கின்ற வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை தந்திருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.

நம்பிக்கை

கேள்வி – மத்திய அரசிடம் நிதி கோரினீர்களே, அது ஒதுக்கப்பட்டிருக்கிறதா?
பதில் – நேற்று தான் நிதி கேட்டோம். இனிமேல் தான் மத்திய அரசு பரிசீலித்து அதற்குண்டான நடவடிக்கையை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

வதந்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை

கேள்வி – சாலையோரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள், வீடில்லாமல் இருப்பவர்களுக்கு உரிய உதவிகள் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறதா?
பதில் – சாலையோரத்தில் மாற்றுத்திறனாளிகள் யாரும் இல்லை. ஏற்கனவே நம்முடைய காவல்துறை அதிகாரிகள், உள்ளாட்சித் துறை அதிகாரிகள் ஆங்காங்கே சாலையோரம் வசிக்கின்றவர்களை அழைத்து வந்து, தங்கவைத்து அவர்களுக்கான உதவிகளை செய்து கொடுத்து கொண்டு இருக்கின்றோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
அதுமட்டுமல்ல, மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றன. 144 தடை உத்தரவை மீறி வெளியில் வந்தவர்கள் மீது 45,046 வழக்குகள் பதியப்பட்டு இருக்கின்றன. 50,393 நபர்கள் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடப்பட்டு இருக்கின்றனர். 37,760 வாகனங்கள் உத்தரவை மீறியதற்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, கொரோனா வைரஸ் தொற்று நோய் பற்றி வதந்திகளை பரப்புவோர் மீது 92 வழக்குகள் பதியப்பட்டு, 95 நபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுத்திருந்து பார்ப்போம்

கேள்வி – பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
பதில் – ஏற்கனவே மத்திய அரசு ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
கேள்வி – அம்மா உணவக பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் கொடுக்கப்படுமா?
பதில் – அவர்கள் ஏற்கனவே பணிபுரியும் தொழிலை தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். அம்மா உணவகத்தில் பணிபுரிகின்ற பணியாளர்கள், உணவு தயாரித்து, வருகின்றவர்களுக்கு உணவு வழங்குவது தான் அவர்களது பணி. அந்தப் பணியை இப்போது மேற்கொண்டு வருகிறார்கள். தினந்தோறும் சமைத்து ஏழைகளுக்கு மலிவு விலையிலே உணவு வழங்க வேண்டும். அந்த உத்தரவை பின்பற்றி செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு தெரிவித்தார்.