சிறப்பு செய்திகள்

வீடு தேடி வரும் கொரோனா நிவாரண உதவித் தொகை ரூ 1000 : முதல்வர் அறிவிப்பு

சென்னை

வீடு தேடி ரூ 1000 அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (3.4.2020) சென்னை, குருநானக் கல்லூரியில் மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத வெளிமாநிலத்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமை பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :-

டோக்கனுடன் சேர்த்து ரூ 1000

கேள்வி – ரேஷன் கடையின் மூலம் வழங்கப்படும் 1000 ரூபாய் எல்லோருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படுமா? சிலர் வெளி மாநிலத்தில், வெளி மாவட்டங்களில் இருக்கிறார்கள், அவர்களுக்கும் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமா?

பதில் – ரேஷன் கடைகளில் வழங்கப்படுகின்ற உணவுப் பொருட்கள் அனைத்தும்விலையில்லாமல் வழங்கப்படும் என்று நான் ஏற்கனவே அறிவித்தேன். அதன்படி நேற்றைய தினத்திலிருந்து விலையில்லாமல் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகிய உணவுப் பொருட்களை வழங்கி கொண்டு இருக்கிறோம். யாராவது வெளியூர் சென்று இருந்தாலோ, வாங்காமல் இருந்தாலோ, இந்த மாத இறுதிக்குள் பெற்றுக் கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல், இனிமேல் டோக்கன் வழங்குகின்ற போதே, 1000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கின்றோம். ஏன் என்றால், கூட்டம் ஆங்காங்கே கூடுகிறது என்று பத்திரிகையிலும், ஊடகங்களிலும் வந்த செய்தியின் அடிப்படையில், எல்லா வீடுகளுக்குமே டோக்கன் கொடுக்கப் போகிறார்கள். அந்த டோக்கன் கொடுக்கும் போதே, அவர்களுக்கு அரசு அறிவித்த 1000 ரூபாய் தொகை வழங்கப்படும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிக்கையாளர்களுக்கு நிவாரண உதவி

அதோடு, பத்திரிகை நண்பர்களும், ஊடக நண்பர்களும் இன்றைக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, அது எவ்வாறு பரவுகின்றது, எவ்வாறு அதை தடுக்க வேண்டும், அரசு எடுக்கின்ற நடவடிக்கை என்ன, மக்கள் அதை எப்படி பின்பற்ற வேண்டும் என்ற செய்தியை எல்லாம் அன்றாடம் தொலைகாட்சி வாயிலாக, பத்திரிகை வாயிலாக தெரிவித்து கொண்டு இருக்கிறீர்கள்.

உங்களுக்கும் சிறப்பாக இந்த அரசு 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற செய்தியை இந்த நேரத்திலே தெரிவிக்கின்றேன். ஏன் என்றால், ஆங்காங்கே வாகனத்தில் போய் கொண்டு இருக்கிறீர்கள், அதற்கு வாகனச் செலவு ஆகும், உணவு செலவு ஆகும், மிக முக்கியமான காலக்கட்டம், இந்த காலக்கட்டத்தில், அரசு உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக பதிவு செய்யப்பட்ட, அரசு அங்கீகரிக்கப்பட்ட நம்முடைய பத்திரிகையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் 3000 ரூபாய் வழங்கப்படும்.

இவ்வாறு தெரிவித்தார்.