தற்போதைய செய்திகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தர்மத்திற்கும்-அதர்மத்திற்கும் போட்டி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பிரச்சாரம்

மதுரை

ஊரக உள்ளாட்சித்தேர்தலில் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே போட்டி நடக்கிறது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பிரச்சாரம் செய்தனர்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கருப்பாயூரணி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த பிரச்சாரத்தில் கழக தகவல் தொழில்நுட்ப இணைச்செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் தக்கார் பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பிரச்சாரத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

இந்திய திருநாட்டில் ஒரு சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் முதலமைச்சரும். துணை முதலமைச்சரும் சிறப்பாக செய்து வருகின்றனர். இதன்மூலம் மக்கள் சக்தி படைத்த இயக்கமாக இன்றைக்கு அ.தி.மு.க திகழ்ந்து வருகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் எப்படியாவது இந்த ஆட்சியை கலைத்து விடலாம் என்று நினைத்தார். ஆனால் அவரால் முடியவில்லை தற்போது குடியுரிமை சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு அவதூறு பிரச்சாரங்கள் செய்து வருகிறார். ஆனால் அவர் நடத்திய பேரணியில் சரிவர கூட்டமில்லை. இதன்மூலம் மக்கள் அவரிடத்தில் இல்லை என்பதை நிரூபணமாகியுள்ளது.

அம்மாவின் திட்டங்கள் ஒவ்வொரு இல்லத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு விலையில்லா 20 கிலோ அரிசி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 90 விழுக்காடு மக்கள் பயன்பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்றைக்கு தனிநபர் வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இதுபோன்ற சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இதுபோன்ற சாதனைகள் திமுக ஆட்சியில் நடைபெறவில்லை.

உள்ளாட்சியில் நல்லாட்சி நடைபெற வேண்டும். இந்த உள்ளாட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை நீங்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும். மேலும் இன்றைக்கு உள்ளாட்சி தேர்தல் வேண்டாம் என்று கூறிய தி.மு.க.விற்கு பாடம் புகட்டும்வண்ணம் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்த பிரச்சாரத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பேசியதாவது:- 

இந்தியாவிலுள்ள 29 மாநிலங்களில் பிரதான எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. ஆனால் உள்ளாட்சித்தேர்தலை சந்திக்க பயந்து நீதிமன்றம் சென்று அதன்மூலம் குட்டுபட்ட ஒரே கட்சி என்றால் அது தி.மு.க தான். ஏனென்றால் தி.மு.க.வில் வலுவான தலைவர் ஸ்டாலின் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல் விவசாயிகளின் கடனை ரத்து செய்வேன் என்று கூறினார். தற்போது தி.மு.க கூட்டணியில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இருந்தும் அவர்களால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடிந்ததா?

கருணாநிதி காலந்தொட்டு தற்போது ஸ்டாலின் வரை மக்களை ஏமாற்றும் விதமாக இதுபோன்ற பொய்யான அறிக்கைகளை கொடுப்பார்கள். ஆனால் செய்ய மாட்டார்கள். இரண்டு ஏக்கர் நிலம் என்று கூறினார்கள். திமுக ஆட்சியில் கொடுத்தார்களா? மாறாக அப்பாவி மக்களின் சொத்தை நிலஅபகரிப்பு செய்தனர். அதை மீட்டுக் கொடுத்தது புரட்சித்தலைவி அம்மா தான்.

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் தேர்தலாகும். தர்மத்தின் வழியில் அ.தி.மு.க கூட்டணியும், அதர்மத்தின் பக்கம் தி.மு.க கூட்டணியும் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு சரியான பாடம் புகட்டுங்கள்.

இவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா பேசினார்.