தற்போதைய செய்திகள்

கரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 728 வழக்குகள் பதிவு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

கரூர்

கரூர் மாவட்டம் முழுவதிலும் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 728 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட துறைகளின் மாவட்ட தலைமை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மாவட்ட தலைமை அலுவலர்களிடம் அமைச்சர்விரிவாக ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது: –

முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் கரூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகள், 2 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளுக்கு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக கிருமி நாசினிகள், கையுறைகள், முகக்கவசங்கள், கைகழுவும் திரவங்கள், கிருமிநாசினி தெளிக்கும் கருவிகள் என இதுவரை ரூ.50 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கரூர் சட்டமன்ற உறுப்பினராகிய நான் என்னுடைய சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரிக்கு புதிதாக 10 வென்டிலேட்டர்கள் வாங்க ரூ.60 இலட்சமும், கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவல்நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசம், கை கழுவும் திரவம், கையுறைகள், கிருமிநாசினிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க ரூ.40 லட்சமும் என மொத்தம் ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள், தனியார் பள்ளி-கல்லூரி நிர்வாகிகள் மூலம் இதுவரை ரூ.42.77லட்சம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களில் 41 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 20 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களோடு தொடர்பில் இருந்தவர்களில் 486 நபர்களும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்குச் சென்று வந்தவர்கள், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் என 1,141 நபர்களும் என ஆகமொத்தம் 1,627 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பபட்டு தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இன்றைய நிலவரப்படி இதுவரை தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 28 நாட்களை கடந்த தொற்று இல்லாத 472 நபர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 45 நபர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நபர்கள் வசிக்கும் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 50 வீடுகளுக்கு ஒரு நபர் என மொத்தம் 1,214 நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு வீடு, வீடாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் மீன், ஆடு, கோழி உள்ளிட்ட அனைத்து வகையான இறைச்சி கடைகளும் இன்று (04.04.2020) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கான பாதுகாப்பு ஆடைகள் கரூர் மாவட்டத்திலேயே தயாரிக்கப்படுகின்றது. முதற்கட்டமாக 6,000 பாதுகாப்பு உடைகள் கரூர் மாவட்ட மருத்துவர்களுக்கென்று ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதிலும், 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 728 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் 37 சோதனைச்சாவடிகளும், மாவட்ட எல்லையில் 18 சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவினை மீறிய நபர்களிடமிருந்து 616 இருசக்கர வாகனங்கள், 7 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

842 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கொரோனோ தடுப்பு கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 563 புகார்கள் மற்றும் தகவல் வந்துள்ளது அதன் மீது உரிய நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

முன்னதாக கொரோனா தொற்று பரவிவரும் இக்கட்டான சூழலிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அயராது பணியாற்றிவரும் செய்தியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் முகக்கவசம், கிருமி நாசினிகள் மற்றும் கைகழுவும் திரவங்களை அமைச்சர் வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கொரோனோ தடுப்பு கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் பார்வையிட்டார்.