தற்போதைய செய்திகள்

கிருமிநாசினிகள், பாதுகாப்பு கவசங்கள் இருப்பில் வைத்திருக்கவேண்டும் – அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு

சென்னை

கிருமிநாசினிகள் மற்றும் ஊழியர்களுக்கான பாகாப்பு கவசங்கள் போதிய அளவில் இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தர விட்டுள்ளார்.

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளின் சார்பில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் நேற்று ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அனைத்து பணியாளர்களுக்கும் மார்ச் மாத ஊதியம் வழங்குவதை உறுதி செய்திடவும், ஊழியர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் முழுமையாக வழங்கிட வேண்டும் எனவும், கிருமி நாசினிகள் இரண்டு மாத இருப்பை உறுதி செய்தல் வேண்டும் எனவும், போதுமான அளவில் தெளிப்பு உபகரணங்கள் இருப்பில் வைத்திருத்தல் வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்பணர்வு ஏற்படுத்தவும், சமூக இடைவெளியை அனைத்து பொது இடங்களிலும் கடைபிடிப்பதை உறுதி செய்யவும்,

அனைத்து அம்மா உணவகங்களிலும் மூன்று வேளைகளும் சூடான, சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்யவும், அனைத்து பொது இடங்களிலும் தினசரி தீவிர துப்புரவு பணி மேற்கொள்ளவும், தினசரி காய்கறி சந்தைகளை பொதுவான வெளியிடங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திடவும், அனைத்து நிவாரண உதவிகளும் பயனாளிகளுக்கு உடனடியாக சென்றடைவதை உறுதி செய்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் கா.பாஸ்கரன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் த.ந.ஹரிஹரன்,

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் சி.என்.மகேஸ்வரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ்.பழனிசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையாளர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, துணை ஆணையாளர் (பணிகள்) பி.குமாரவேல் பாண்டியன், தலைமைப் பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-126, தெற்கு கனால் பேங்க் சாலையில் நவீன இயந்திரம் மற்றும் ஜெட்ராடிங் இயந்திரம் கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி, இரண்டாவது டிரஸ்ட் பிரதான சாலையில் டிராக்டரில் பொருத்தப்பட்ட இயந்திரம் கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணியினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தொலைபேசி ஆலோசனை மையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ரிப்பன் மாளிகையில் நவீன இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.