தற்போதைய செய்திகள்

அதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடைக்கு சீல்: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை

சென்னை,

ஊரடங்கை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்

சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை துறையின் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார், இந்த ஆலோசனையில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் ஆணையர் ஜெகந்நாதன் ஆகியோர் பங்கேற்றனர்.இதனை தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்று நோயை ஒழிக்க வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் முதல்வர் பல்வேறு பாதுகாப்பு தொடர்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இன்று ( நேற்று) 12 வது நாளை நெருங்கியிருக்கிறோம், முதல்வர் அறிவித்த 144 தடை உத்தரவுக்கு மக்கள் பேராதரவு வழங்கி வருகிறார்கள்.கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க 11 முறை கூட்டங்கள் நடத்தி மூத்த ஐஏஎஸ்கள் அடங்கிய குழுக்களை நியமித்து முதல்வர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார், நோய்த்தொற்றை தடுக்கவும் தேவையான அறிவுரைகளை வழங்கி நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார். மக்களை பாதுகாக்க முதல்வர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வரின் முத்தான வார்த்தைகள்

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ரூ 451 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் துரிதமான நடவடிக்கை மேற்கொண்டுள்ளார், ஊரடங்கால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரூ 3,280 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதனை கண்காணிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவையும் முதல்வர் அமைத்து அவர்களுக்கு அறிவுரையும் ஆலோசனையும் வழங்கி வருகிறார். இதன் காரணமாக கொரோனா என்பது சமூக பரவல் இல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது, கொரோனா நோய்த்தொற்றை தடுக்க ஒரே தீர்வு விழித்திரு, விலகியிரு,வீட்டிலிரு என்ற முதல்வரின் முத்தான வாசகங்களை கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த நோய்க்கு ஒரே தீர்வு ஒரு மருந்து, சுயத்தனிமையும் சமூக விலகலும் தான்.

போரில் வெல்லவேண்டும்

அதனை வலியுறுத்தி தான் இன்று ( நேற்று) முதல் அதிகாலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை கடைகள் திறப்பு என்பது அதிகாலை 6 மணி முதல் பகல் 1 மணியாக குறைக்கப்பட்டுள்ளது, சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதற்காக அடிப்படையில் தான் மக்களின் பாதுகாப்புக்காக தான் முதல்வர் இந்த அறிவிப்பை வழங்கியுள்ளார்.இதற்கு தமிழக மக்கள் அளித்து வரும் ஒத்துழைப்பு என்பது இதுவரை இந்திய துணைக்கண்டமே பாராத ஒன்றாக இருக்கிறது.பேரிடர் மேலாண்மைப்படையினரும் ஆயிரம் பேர் திரண்டு மக்கள் மத்தியில் சுய தனிமைப்படுத்தலை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.நாம் சமூக இடைவெளியை கடைபிடிப்போம். கொரோனா வைரஸை கொல்ல வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் நாம் வெல்ல வேண்டும்.நகரப்பகுதிகளை விட கிராமத்து பகுதிகளில் பேரிடர் மேலாண்மை படையின் 45 ஆயிரம் முதல் நிலை மீட்பாளர்கள், காவல் துறையினர், வருவாய்த்துறையினரோடு, கிராம நிர்வாக அதிகாரிகளும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள் . அதன்மூலம் தான் மனித குலத்தை காப்பாற்ற முடியும் என்று அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகிறார்கள்

முதல்வர் கோரிக்கை

மத்திய அரசிடம் தமிழகத்திற்கு கொரோனா நிவாரணத்திற்கு உரிய நிதி வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை வருகிறார் .பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 11 ஆயிரம் கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் ரூ 510 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, தமிழகத்தில் கொரோனா நிவாரணத்திற்கு தேவையான நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசிடமிருந்து தேவையான நிதியை முதல்வர் வலியுறுத்தி பெற்று தருவார்.

அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை

மக்களின் நன்மைக்காக தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதில் எல்லா தரப்பினரும் சமூக பொறுப்புடனும் சமூக கடமையுடனும் செயல்பட வேண்டு்ம் அதற்கான சமூக பொறுப்பும் சமூக கடமையும் அனைவருக்கும் இருக்கிறது, ஊரடங்கு நேரக்குறைப்பை உத்தரவை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் குறிப்பிட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும். விற்பனை உரிமமும் ரத்து செய்யப்படும், என்று தமிழக அரசு அறிவித்துள்ளது, அதற்கேற்ப சில கடைகளின் உரிமமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது, கடைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து குறைகள் இருந்தால் தெரிவிக்க மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 1070 என்ற கட்டுப்பாட்டு அறைக்கும் மாநில அளவிலான கட்டுப்பாட்டறையின் 1077 எண் கட்டுப்பாட்டு அறை எண்கள் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. அதில் புகார் செய்யலாம்.ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் மாதம் 14 ம்தேதி வரை கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, அதை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து மத்திய அரசே முடிவு செய்யும் என்று ஏற்கனவே முதல்வர் அறிவித்துள்ளார் இவ்வாறு அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.