நாமக்கல்

கொரோனா நோய்த்தொற்றினை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றினை தடுக்க பொதுமக்கள் வீடுகளில் தங்களை, தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள அனைத்து மதத்தினரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதற்காக அனைத்து மத பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ். தலைமையில், காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில் தெரிவித்ததாவது, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றானது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகின்றது. தற்போது உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்நோய்த்தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றார்கள். பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளே இந்நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து தமது நாட்டு மக்களை காக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பயனளிக்காமல் உள்ளது. நமது நாட்டில் தற்போது நோய்த்தொற்றானது கட்டுக்குள் உள்ளது.

நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் சம்மந்தப்பட்ட நபர்கள், அவர்கள் சென்று வந்த இடங்களில் உள்ள நபர்களின் விவரங்களை சேகரிக்க முடிகின்றது. நோய்த்தொற்று யாரால் ஏற்பட்டது என்ற விவரம் தெரியாத நிலையை அடைந்தால் நோய்த்தொற்றினை தடுப்பது மிகுந்த சிரமமான காரியமாக ஆகிவிடும்.

இந்த நிலை ஏற்படாமல் தடுக்க நமது பிரதமர் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவினை செயல்படுத்தியுள்ளார். அதேசமயம் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற விலக்கு அளித்துள்ளார். பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை தினந்தோறும் வாங்குவதற்காக தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதனால் நோய்த்தொற்று பரவுவதற்கான அபாயம் உள்ளது.

இதனை தடுக்க காய்கறிகளை ஒரு வாரத்திற்கு தேவையான அளவிற்கு வாங்கிக்கொள்ள வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகத்தால் நாமக்கல் நகராட்சி பகுதியில் 8 இடங்களில் காய்கறி சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடமாடும் காய்கறி கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே இந்த கூட்டத்திற்கு வந்து அனைத்து மத பிரதிநிதிகள், தங்கள் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல், தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்த வேண்டும். இதற்கு முதலமைச்சரின் விழித்திரு – விலகி இரு – வீட்டில் இரு என்ற அறிவுரையை கட்டாயம் கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்லி ராஜ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.சீனிவாசன் உள்பட அரசு அலுவலர்கள், அனைத்து மத பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.