தற்போதைய செய்திகள்

புதுக்கோட்டை நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்றுநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.உமாமகேஸ்வரி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து, கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பா.ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த ஆய்விற்கு பின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கிருமிநாசினி தெளித்தல், தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல், கைகழுவும் அமைப்பு ஏற்படுத்துதல், சுகாதார பாதுகாப்பு போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்றையதினம் மாவட்டத்தில் முதல்முறையாக புதுக்கோட்டை உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள கிருமிநாசினி வழித்தடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த கிருமிநாசினி வழித்தடத்தில் செல்லும் பொழுது முழுமையாக கிருமிநாசினி கலந்த நீர் தெளிக்கப்பட்டு நோய்தொற்று தடுக்கப்படும். இது பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இதேபோன்று பொதுமக்கள் தண்ணீர் தொட்டியை தொடாமல் கைகழுவும் வகையில் முன்மாதிரியாக கைபடா கைகழுவி அமைப்பும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் பொதுமக்கள் கைகளால் தண்ணீர் தொட்டியை தொடாமல் கைகழுவ முடியும். மேலும் நகராட்சியில் உள்ள பொதுமக்கள் காய்கறிகள் வாங்க

வெளியில் செல்வதை முற்றிலுமாக தடுக்கும் வகையில் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே நேரடியாக சென்று காய்கறிகளை வழங்கும் வகையில் நடமாடும் காய்கறி வாகனங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் வாகனம் மூலம் நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் வழங்கப்படும்.

மேலும் தீயணைப்பு வாகனத்தை பயன்படுத்தி கீழராஜவீதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியும் பார்வையிடப்பட்டது. இதேபோன்று தீயணைப்புத்துறை வாகனத்தின் மூலம் நகரின் பல்வேறு இடங்கள் மற்றும் உயரமான கட்டடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நோய்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தொடர்ந்து இப்பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன், கோட்டாட்சியர் தண்டாயுதபாணி ஆகியோர் உடனிருந்தனர்.