தற்போதைய செய்திகள்

ராமநாதபுரம் தொகுதியில் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ நிவாரண உதவி

ராமநாதபுரம்

ராமநாதபுரம் தொகுதியில் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ பொதுமக்களை நாடிசென்று நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். இதற்காக அவர்கள் சட்டமன்ற உறுப்பினருக்கும், முதலமைச்சருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளான எம்.ஜி.ஆர் நகர், வசந்தம் நகர், சின்னக்கடை வீதி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் உதவிக்கரம் நீட்டி வருகிறார். கொரோனா வைரஸ் கிருமியின் தாக்கம் தமிழகத்தில் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும் மக்கள் அதிக அளவில் கூடாதவாறு பார்த்துக் கொள்வதிலும் கழக அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்படும் என தெரிவித்த தமிழக முதல்வர் அதனை மக்கள் சிரமமின்றி வாங்க ஏற்பாடு செய்து அதனை உடனே செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அது மட்டுமல்லாமல் அரிசி, சர்க்கரை, கோதுமை துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் என அனைத்தும் ஏப்ரல் மாதத்திற்கு இலவசமாக வீடு தேடி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன்கள் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டும் வருகிறது. இதனைத்தொடர்ந்து அந்த நிவாரண தொகையான ஆயிரம் ரூபாயும், அத்தியாவசியப்பொருட்களையும் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன் வழங்கினார். மேலும் கொரோனா தொற்று கிருமியின் காரணமாக அரசு அறிவித்த ஊரடங்கு நாள் முதல் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க தொடர்ந்து சுவைமிக்க உணவினை தயாரித்து ஒவ்வொரு பகுதிகளிலும் அதனை நேரில் சென்று வழங்கி வருகிறார்.

தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளின்றி மற்ற பகுதிகளுக்கும் நேரிடையாக சென்று தினந் தோறும் உணவினையும், உதவித்தொகையினையும், முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி போன்ற உபகரணங்களை வழங்கி வருகிறார்.

ராமநாதபுரம் எம்.ஜி.ஆர் நகரில் 300-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பேரிடர் காலங்களிலும், நோய்கள் பரவும் காலங்களிலும் எம்.ஜி.ஆரின் இயக்கம் தான் தொடர்ந்து உதவி வருகிறது. எங்களை வாழ வைத்து கொண்டிருக்கும் கழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டனுக்கும் நன்றி தெரிவித்து பாராட்டினர்.