கரூர்

நடமாடும் காய்கறி அங்காடிகளின் செயல்பாடு குறித்து கரூர் ஆட்சியர் ஆய்வு

கரூர்

கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் காய்கறி அங்காடிகளின் செயல்பாடு குறித்தும், 144 தடை உத்தரவு முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீதிவீதியாக நடமாடும் காய்கறி அங்காடி வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், நடமாடும் காய்கறி அங்காடி வாகனங்களின் செயல்பாடு குறித்தும், 144 தடை உத்தரவு பொதுமக்களால் முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்தும், உத்தரவை மீறி இறைச்சிக்கடைகள் இயங்குகின்றதா என்பது குறித்தும் கரூர் பேருந்து நிலையம் முதல் வேலுச்சாமிபுரம் வரையிலும், ராமகிருஷ்ணபுரம், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ராமகிருஷ்ணபுரத்தில் காய்கறி வாங்க வந்திருந்த பொதுமக்களிடம் சமூக விலகலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கிச்செல்லுமாறு அவர் அறிவுறுத்தினார். மேலும், வியாபாரியிடம் காய்கறிகளை நிர்ணயித்த விலைக்கு மட்டுமே விற்க வேண்டும் என்றும் அதிக விலைக்கு காய்கறிகளை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

பேருந்து நிலையத்தில் இயங்கிவந்த தற்காலிக காய்கறி கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், இரவு 1 மணி முதல் காலை 6 மணி வரை மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரிகளுக்கு மட்டும் காய்கறிகளை வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இங்கு காய்கறிகளை வாங்க மற்றும் விற்க வருகை தரும் வியாபாரிகளின் பாதுகாப்பை உறுதிசெய்திட சிறப்பு ஏற்பாடாக கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே அவர்களை அனுமதிக்கும் வகையில், கிருமி நாசினி தெளிக்கும் அரங்கம் அமைக்கும் பணிகள் பேருந்து நிலையத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் ஏடிஎம் மையங்களுக்கு அதிகம் வருவதை தவிர்க்கும் வகையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நடமாடும் ஏ.டி.எம். வாகனம் மூலம் சேவையை வழங்கி வருகின்றது. அதனடிப்படையில் இன்று மனோகரா ரவுண்டானா பகுதியில் இருந்த நடமாடும் ஏடிஎம்.வாகனத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

ஏ.டி.எம். இயந்திரத்தை இயக்க வருகை தரும் வாடிக்கையாளர்களின் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே வாகனத்திற்குள் அனுமதிக்கப்படுவதையும், வாடிக்கையாளர்கள் டிஷ்யு பேப்பர் அல்லது கைக்குட்டைகளைக் கொண்டு ஏ.டி.எம்.இயந்திரத்தின் பொத்தான்களை இயக்க அனுமதிக்கப் படுவதையும், ஒருவரின் பரிவர்த்தணை முடிவுற்றபிறகு ஏ.டி.எம்.இயந்திரத்தின் பொத்தான்கள் கிருமிநாசி கொண்டு சுத்தம் செய்யப்பட்ட பிறகே அடுத்தவர் பணபரி வர்த்தனைக்கு அனுமதிக்கப்படுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

பின்னர் அருகில் இருந்த மருந்தகத்திற்கு வரும் பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க ஏதுவாக ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கை போட்டு, வெயில் தாக்கம் இல்லாத வகையில் பந்தல் அமைத்து செயல்படுவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அரசின் உத்தரவை முறையாக பின்பற்றி பொதுமக்களுக்கு மருந்து பொருட்களை விற்பனை செய்து வருவதற்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளின் போது கரூர் வருவாய் கோட்டாட்சியர் வ.சந்தியா, நகராட்சி பொறியாளர் நக்கீரன், கரூர் வட்டாட்சியர் அமுதா ஆகியோர் உடனிருந்தனர்.