தற்போதைய செய்திகள்

ஆவடியில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு கவச உடை – அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்

அம்பத்தூர்:

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்கள் மற்றும் நிவாரண முகாம்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆவடி வியாபாரிகள் நல சங்க கூட்டமைப்பு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் ஆவடி வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் அம்மா உணவகத்திற்கு 6250 கிலோ அரிசி மூட்டைகள், 100 கிலோ பருப்பு 200 லிட்டர் சமையல் எண்ணெய் 500 கிலோ வெங்காயம் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் மளிகை பொருட்கள் தனியார் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் கொரோனா தொற்று பாதுகாப்பு முக கவசம் ,ஆவடி போர் ஊர்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு கைகள் சுத்தப்படுத்த கிருமிநாசினி, கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சார்பில் 25 கிலோ வெங்காயம் தக்காளி அனைத்து காய்கறிகள் 25 கிலோ மற்றும் ஆவடி சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதுகாப்பு கவச உடை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,

இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்துகொண்டு ஆவடி மாநகராட்சி பணி புரியும் சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அம்மா உணவகத்தின் பணியாளர்களிடம் இந்த நிவாரணப் பொருட்களை வழங்கினார் ,நிவாரண பொருட்கள் வழங்கிய தனியார் நிறுவனம் மற்றும் வியாபாரிகளுக்கு அரசின் சார்பிலும் தனது தனிப்பட்ட முறையிலும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார் .

பின்னர் அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆவடி மாநகராட்சியை பொறுத்தமட்டில் அனைத்து வார்டுகளிலும் தினந்தோறும் பிளீச்சிங் பவுடர் கிருமிநாசினி, குளோரின் கலந்த கிருமிநாசினி போன்றவை தெளிக்கப்பட்டு முற்றிலும் கொரோனா தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆவடியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் கொரோனா பாதிப்படைந்த பகுதிகள் அனைத்தும் காவல்துறையினரால் இன்று சுகாதாரத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடியார், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நடவடிக்கையால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அரசு துறைகள் அனைத்தும் மேற்கொண்டு வருகின்றன. தமிழக மக்களின் பாதுகாப்பு அரணாக அம்மாவின் அரசு செயல்படும்.

ஆவடியில் உள்ள இரண்டு அம்மா உணவகங்களில் தினந்தோறும் ஒரு வேளைக்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சாப்பிடுகின்றனர். இன்றைய ஊரடங்கு சூழ்நிலையை கருத்தில் கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து தன்னுடைய பசியைப் போக்கிக்கொள்ளும் அட்சய பாத்திரமாக அம்மா அவர்கள் தொடங்கி வைத்த அம்மா உணவகம் திகழ்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு பெருகி வரும் சூழலில் பொதுமக்கள் தங்களை வீட்டுக்குள் இருந்து பாதுகாத்து கொண்டு அரசுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

அப்போது அவருடன் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், ஆவடி வட்டாட்சியர் சங்கிலி ரதி, ஆவடி நகர கழக செயலாளர் ஆர்.சி.தீனதயாளன் ஆகியோர் இருந்தனர்.