தற்போதைய செய்திகள்

பகை ஓடட்டும், நமது கொடி பறக்கட்டும் – வைகைச்செல்வன் பேச்சு

கடலூர்

பகை ஓடட்டும், நமது கொடி பறக்கும் என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் வைகைச்செல்வன் கூறினார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கடலூர் மத்திய மாவட்டம், குள்ளஞ்சாவடியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக செய்தித் தொடர்பாளருமான டாக்டர் வைகைச்செல்வன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு திட்டமும் காலத்தால் அழிக்க முடியாதது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வரும் சாதனைகளைப்போல, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் சாதனைகள் நிகழ்த்தப்படவில்லை.

இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் எடுத்துக்காட்டாய் திகழும் முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி, அந்த திட்டங்கள் அடைந்திருக்கும் வெற்றியின் காரணமாக தேசிய அளவிலும், உலக அரங்கிலும் பல பாராட்டுகளையும், சான்றிதழ்களையும் கழக அரசு பெற்று வருகிறது. எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு மின் தேவை முற்றிலும் நிறைவு செய்யப்பட்ட மாநிலமாக தமிழகம் இப்பொழுதும் ஒளிர்கிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு, எப்படியாவது முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்று மு.கஸ்டாலின் பல்வேறு விதமான பித்தலாட்டங்களை செய்து பார்த்தும், எதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தி.மு.க.வின் வெற்று வாக்குறுதிகளை நம்பி வாக்களித்திருந்தாலும், இடைத்தேர்தலில், தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும் என்று மிகத் தெளிவான தீர்ப்பளித்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஸ்டாலின் எப்படியாவது கழக ஆட்சியை கலைத்தே தீர வேண்டும் என்று துடிக்கிறார். 1996-ல் காங்கிரஸ் கட்சியை உடைப்பதற்கு த.மா.கா.வை உருவாக்கி, தி.மு.க ஆட்சிக்கு வந்தது. தி.மு.க இன்று மட்டுமல்ல, எப்போதுமே அடுத்த கட்சியை உடைத்து, அதன் மூலம் அதிகாரம் கிடைக்குமா என்று அலைவதுதான் வாடிக்கையாகவே வைத்திருக்கிறது.

மக்களுக்காக நான், மக்களால் நான் என வாழும் மக்கள் சக்தியின் மறு பிம்பமாக விளங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என்றென்றும் வெற்றி என்ற வரலாற்று உண்மையை நிருபிக்கும் விதமாக, நடைபெற இருக்கின்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கழக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்திருக்கிற வேட்பாளர்கள் அனைவரையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, பகையை விரட்டி, கோட்டையில் என்றென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கொடி பறக்க விடுவோம் என்கிற உள்ள உறுதியுடன் அனைவரும் ஒருங்கிணைந்து களப் பணியாற்றிடுவோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டாக்டர் வைகைச்செல்வன் பேசினார்.

இக்கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கழக அமைப்பு செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கழக எம்.ஜி.ஆர். அணி துணை செயலாளர் இன்பராஜ், கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் பிரசன்னா அழகர்சாமி, பா.ம.க துணை செயலாளர் முத்துக்கிருஷ்ணன், தே.மு.தி.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவக்கொழுந்து, கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.