தற்போதைய செய்திகள்

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு

கரூர்

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்திற்காக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் கொரோனா குறித்த சந்தேகங்களையும், புகார்களையும் பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் இயங்கிவரும் 24 மணி நேரக்கட்டுப்பாட்டு அறையை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகனுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், உளவியல் நிபுணர்களிடம் இதுவரை வரப்பெற்றுள்ள புகார்கள் குறித்தும், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

மேலும், கொரோனா தொற்று குறித்த பயத்தாலும், சந்தேகங்களாலும் போன் செய்யும் பொதுமக்களுக்கு பொறுமையுடனும், மனிதநேயத்துடனும் பதிலளிக்க வேண்டும் என்றும், கொரோனா குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், உளவியல் ரீதியாக அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும் உங்கள் பதில் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

புகார்கள் குறித்து பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டார். இதுவரை 563 புகார்கள் மற்றும் தகவல்கள் வரப்பெற்றுள்ளதாகவும், அனைத்து புகார்களின் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்கள். இந்நிகழ்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பாண்டியராஜன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.