சிறப்பு செய்திகள்

தொகுதி மேம்பாட்டு நிதி: ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்

எம்ஏல்ஏக்களின் தொகுதி நிதியில் 1 கோடியை பயன்படுத்த உத்தரவு

சென்னை

தொகுதி மேம்பாட்டு நிதி தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை

தெரியாமல் குறை கூறியுள்ளார் ஸ்டாலின்

எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் , தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், ஒரு சட்டமன்ற உறுப்பினர் கொடுத்த நிதியினை, நிர்வாகம் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும், அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று என்றும், இப்பிரச்சனையில் முதலமைச்சர் கவனிக்கவும் என்றும் பதிவிட்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் வழிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்தான், சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின்படி, வரையறுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு அந்நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். இதை அறியாமல், எதிர்கட்சித் தலைவர் டிவிட்டரில் விதிமுறைகளின்படி செய்ததை குறை கூறியுள்ளார்.

25 லட்சம் அனுமதி

ஏற்கனவே கொரோனா தொற்றுநோய் தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு, அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் ரூ.25 இலட்சம் அந்தந்த தொகுதியில் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

1 கோடி நிதி பயன்படுத்த உத்தரவு

மேலும், கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க மாவட்ட மற்றும் மாநில அளவில், மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்குவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாயினை, மாநில அளவில் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு பயன்படுத்திக்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.