சிறப்பு செய்திகள்

தயார் நிலையில் தமிழகம்: முதல்வர் பேட்டி

சென்னை

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று (9.4.2020) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள குழுக்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :-

சிறப்பான பணி

இன்றைய தினம் ஏற்கனவே அரசு அறிவித்தபடி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 12 குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்களும் சிறப்பாக பணியாற்றி கொரானா வைரஸ் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனி பணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தக் குழுவில் துறை செயலாளர்கள் மற்றும் ஐஏஎஸ் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகள் இடம் பெற்றிருக்கின்றனர். இந்தக் குழு தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை திறம்பட செயல்படுத்துவதன் காரணமாக இன்றைக்கு தமிழகத்திலே கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றது என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

19 ஆய்வகங்கள்

இதுவரை, விமான நிலையங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட பயணிகள் எண்ணிக்கை 2,10,538 நபர்கள். மேற்கண்ட பயணிகளில் வீட்டுக் கண்காணிப்பில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை 92,814 நபர்கள். அதில், 28 நாட்கள் கண்காணிப்பு நிறைவு பெற்றுள்ள பயணிகளின் எண்ணிக்கை 32,075. நோய் தொற்று ஏற்பட்டவர்களை பரிசோதனை செய்வதற்காக தமிழகத்தில் ஆய்வகங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. அரசின் சார்பாக 12, தனியார் சார்பாக 7 என மொத்தம் 19 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

32,371 படுக்கைகள் தயார்

இன்றைய தேதிவரை ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,095 நபர்கள். இன்றைய தேதி வரை கெரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 738 நபர்கள். இன்றைய தேதிவரை பரிசோதனை முடிவுகள் வர வேண்டிய நபர்களின் எண்ணிக்கை 344 நபர்கள்.

கொரானா வைரஸ் நோய் என சந்தேகிக்கப்பட்டு உள்நோயாளிகளாக தனிப்பிரிவில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,953 நபர்கள். கொரோனா நோய்த்தொற்று கண்டறிய பட்டவர்களில் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 21 நபர்கள். கையிருப்பில் உள்ள வென்டிலேட்டர்கள் எண்ணிக்கை 3,371. தனிமைப் பிரிவில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, அரசின் சார்பாக 22,049, தனியார் சார்பாக 10,322 என மொத்தம் 32,371 படுகைகள் தயார் நிலையில் இருக்கின்றன. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 8 நபர்கள். கொரானா வைரஸ் வராமல் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது அரசின் கையிருப்பில் மூன்று மடிப்பு முகக் கவசங்கள், என்95 முகக் கவசங்கள், உடல் பாதுகாப்பு உடைகள், காய்ச்சல் மருந்துகள், ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் மற்றும் ஐவி திரவங்கள், பிசிஆர் கிட்ஸ் அனைத்தும் போதிய அளவு கையிருப்பில் உள்ளன. 2500 வென்டிலேட்டர்கள் வாங்குவதற்காக கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல,4 லட்சம் துரித ஆய்வக உபகரணங்கள் வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 50,000 வந்துவிடும். மத்திய அரசில் இருந்து 20,000 கொடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள், அவைகளும் நாளை வந்து விடும். பிசிஆர் 1.30 லட்சம் எண்ணிக்கைகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை நடவடிக்கைகள்- 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 1,17,796. கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,27,792 நபர்கள், பிறகு அவர்கள் ஜாமீனில் விடப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவை மீறி வாகனத்தில் சென்றவர்களின் வாகன பறிமுதல் எண்ணிக்கை 99,797. வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டவர்களிடம் அபராதத் தொகையாக ரூபாய் 40,09,944 வசூல் செய்யப்பட்டுள்ளது.

96.30 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம்

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி அரிசி குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும். எல்லா அரிசி குடும்ப அட்டைக்கும் தலா ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்தோம். அந்த வகையில், பயனாளிகளின் எண்ணிக்கை 2,01,46,993. இதற்கு ரூ.2014.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,93,82,420 அட்டை தாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது 96.30 சதவிகித குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நிவாரண பொருட்களாக 95,01,932 குடும்ப அட்டைகளுக்கு விலையில்லாமல் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

2 நாட்களில்

கட்டுமானத் தொழிலாளர்களில் நிவாரணம் பெற 12,13,882 நபர்கள் தகுதியானவர்கள், இதற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.121.39 கோடி. இதுவரை 1,46,818 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள அனைவருக்கும் 2 நாட்களில் வழங்கப்பட்டு விடும்.வெளிமாநில கட்டுமானத் தொழிலாளர் களைப் பொறுத்தவரைக்கும் 64,274 பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 6.43 கோடி ரூபாய். இதுவரை 19,464 நபர்களுக்கு விலையில்லாமல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள அனைவருக்கும் 2 நாட்களில் வழங்கப்பட்டு விடும். ஓட்டுநர் தொழிலாளர்கள் நிவாரணம் பெறுபவர்களின் எண்ணிக்கை 83,500. அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.8.40 கோடி. இதுவரை அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 26,222.

நடமாடும் காய்கறி விற்பனை நிலையங்கள்

நம்முடைய மாநிலத்தில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளர்கள் மொத்த எண்ணிக்கை 1,71,085. கட்டடத் தொழிலாளர்களின் எண்ணிகிக்கை 1,12,074. பிற வணிக நிறுவனங்களில் 20,294 பேர் பணிபுரிகிறார்கள். கரும்பு வெட்டும் பணியில் 3,500 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். நம்முடைய மாநிலத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு பணி செய்ய சென்றவர்களின் எண்ணிக்கை 7,376.
இன்றைக்கு அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காய்கறி வாங்குவதற்கு இன்றைக்கு ஆங்காங்கே மார்க்கெட்டில் அதிகமாக மக்கள் கூடுகிறார்கள்.

சமூக இடைவெளியை பின்பற்றாத காரணத்தினால் காய்கறிகளை அவரவர்கள் பகுதிக்கே கொண்டு சென்று காய்கறிகளை வழங்குவதற்காக அரசு நடமாடும் காய்கறி விற்பனையை தொடங்கியிருக்கிறது. அதன் மூலமாக 8.4.2020 ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் வேளாண்மைத் துறையின் மூலமாக சுமார் 2000 மெட்ரிக் டன் காய்கறிகளை விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது. உழவர் சந்தை மூலம் மட்டும் 1070 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை ஆகியிருக்கின்றன. அதுமட்,டுமல்லாமல், இன்றைக்கு 66 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலமாக காய்கறிகள் எல்லாம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் வேளாண்மைத் துறை, உள்ளாட்சித் துறை ஆகிய 2 துறைகளும் இணைந்து 3,500 வாகனங்களின் மூலமாக அந்தந்த பகுதி மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலேயே காய்கறிகளை வழங்குவதற்காக நடமாடும் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, இன்றைக்கு சி.எம்.டி.ஏ. மூலமாக 100 வாகனங்கள் மூலமாக சென்னையில் நடமாடும் காய்கறி விற்பனை துவங்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.

அண்டை மாநிலத்தில் கொள்முதல்

விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறி, பழங்களையெல்லாம் ஆங்காங்கே இருக்கின்ற 111 குளிர்சாதன கிடங்குகளில் வைத்து பத்திரப்படுத்தி வைத்து பிறகு விற்பனை செய்து கொள்ளலாம். 30.4.2020 வரை அதற்கு வாடகை வசூல் செய்யப்பட மாட்டாது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அத்தியாவசியப் பொருட்கள் முழுமையாக தங்கு தடையில்லாமல் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக இன்றைக்கு எந்தெந்த மளிகைப் பொருட்கள் கிடைக்கவில்லையோ, அவையெல்லாம் கண்டறியப்பட்டு, அண்டை மாநிலங்களில் கூட்டுறவுத் துறையின் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தில் விற்பனை செய்யப்படும். இதனால் விலை கட்டுப்படுத்தப்படும்.

137 தனியார் மருத்துவமனைகள்

அதுபோல வெளி மாநிலங்களிலிருந்து மளிகைப் பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள் தங்கு தடையில்லாமல் தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு இன்றைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. அதோடு, இன்றைய தினம் தமிழகம் முழுவதும் மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்காக 137 தனியார் மருத்துவக் கல்லூரிகள் ,மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டவுடன் இந்த மருத்துவமனைகளில் சேர்ந்து அவர்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

தயார் நிலையில்

இதில் கொரோனா வைரஸ் நோய் ஏற்பட்டவுடனேயே அரசைப் பொறுத்தவரைக்கும் இன்றைக்கு உரிய முறையிலே பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதற்காக அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

அதேபோல, இன்றைக்கு அரசு மருத்தவமனை, தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமாக 96,773 படுக்கை வசதிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், யார் நோய்வாய்ப்பட்டாலும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து வசதிகளும் எங்களால் செய்து தரப்பபடுகின்றன, தயார் நிலையில் இருக்கின்றோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேரடியாக முதியோர் உதவித்தொகை

அதேபோல, முதியோர் , மாற்றுத்திறனாளிகளுக்கெல்லாம் உதவி செய்ய வேண்டுமென்பதற்காக அரசு ஆணையிட்டு, அவர்களுக்கும் உரிய வகையிலே மூன்று வேளையும் உணவு அளிக்கப்படுகின்றது. அந்த வகையிலே, திருமண மண்டபம், சமூக நலக் கூடத்திலே சுமார் 73,834 நபர்களை தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான உணவை நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.

80 வயதை கடந்த 13,66,579 முதியோர்களுக்கு நேரடியாக அவர்கள் இல்லங்களுக்கே சென்று முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய இரண்டு மாத உதவித்தொகை 1,95,249 நபர்களுக்கு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அங்கன்வாடிகளில் 24 லட்சம் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதையும் இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன். இவ்வாறு தெரிவித்தார்.