மற்றவை

தூய்மை காவலர்களை கவுரவித்த கிராம மக்கள்: நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பாராட்டு

தர்மபுரி, ஏப்.12-

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாளநத்தம் பஞ்சாயத்தில் நொச்சிக்குட்டை, காவேரி புரம், அய்யம்பட்டி, குண்டலப்பட்டி, நடூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் தற்போது வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்த ஊராட்சி 15க்கும் மேற்பட்ட காவலர்கள் துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவாத வகையில் துப்புரவு பணியாளர்கள் சீர்மிகு பணியாற்றி வருவதையொட்டி அவர்களின் சேவையை பாராட்டி படித்த பட்டதாரிகள், அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஊர் பொது மக்கள் ஒன்று சேர்ந்து “தாளநத்தம் கிராம வளர்ச்சி குழு” எனும் குழுவை உருவாக்கி அக்குழு சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு 10 கிலோ அரிசி ,ஒருகிலோ பருப்பு, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு லிட்டர் ஆயில், அனைத்து காய்கறிகள் கொண்ட தொகுப்பு பை, முககவசம், கையுறைகள் ஆகியவைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி ஊராட்சி அலுவலகம் முன்பு கடத்தூர் காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன், துப்புரவாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட வைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தாளநத்தம் கிராம வளர்ச்சி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்