தமிழகம்

பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் – தலைமை நீதிபதிக்கு முதலமைச்சர் பரிந்துரை…

சேலம்:-

பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

சேலம், எடப்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:- 

எடப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எடப்பாடி, பூலாம்பட்டி மற்றும் கொங்கணாபுரம் ஆகிய மூன்று காவல் நிலையங்களின் எல்லைகளை கொண்டதாக இருக்கும். சங்ககிரி முன்சீப் நீதிமன்றத்தில் இருந்து 531 வழக்குகளும், சங்ககிரி குற்றவியல் நீதிமன்றங்கள் இரண்டிலிருந்தும் 377 வழக்குகளும் மொத்தம் 908 வழக்குகள் எடப்பாடி நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளன.

இதன் மூலம் இப்பகுதியில் வழக்கு தொடுத்தோருக்கு குறித்த காலத்தில் நீதி கிடைக்கும். மாநிலத்தின் உயரிய நீதி அமைப்பு சென்னை உயர் நீதிமன்றம் ஆகும். இதன் கிளை மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 1149 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் சென்னையில் 126 நீதிமன்றங்களும், இதர மாவட்டங்களில் 1023 நீதிமன்றங்களும் இயங்கி வருகின்றன.

நீதிமன்றங்களுக்கான கட்டடங்கள் கட்டுதல், பராமரித்தல், நீதிபதிகளுக்காக குடியிருப்புகள் கட்டுதல் போன்ற நீதித்துறைக்கான மேம்பாட்டு பணிகளுக்காக கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 1000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

2011-12 முதல் 2018-19-ம் ஆண்டுகள் வரை 456 புதிய நீதிமன்றங்கள் ஏற்படுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னையில் சிறப்பு நீதிமன்றம் உட்பட 33 புதிய நீதிமன்றங்களை 2018-19-ம் ஆண்டில் அம்மாவின் அரசு அமைத்துள்ளது. நீதிமன்றங்களுக்கு 15 புதிய கட்டடங்களை கட்டுவதற்கு 2018-19-ம் ஆண்டில், 101 கோடியே 89 லட்சம் ரூபாய் அம்மாவின் அரசால் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

2019-2020-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நீதி நிர்வாகத்திற்காக 1 ஆயிரத்து 265 கோடியே 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர், முசிறியில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கள்ளக்குறிச்சியில் கூடுதல் சார்பு நீதிமன்றம், குழித்துறையில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம், ஸ்ரீவைகுண்டத்தில் கூடுதலாக ஒரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம், நாங்குநேரி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் சார்பு நீதிமன்றம் சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் வட்டங்களில் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், காரியமங்கலம், விக்கிரவாண்டி, சிங்கம்புணரி, பல்லாவரம், மதுரவாயல் ஆகிய இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றம் ஆகியவை வரும் ஆண்டுகளில் அமைக்கப்பட உள்ளன.

வழக்குரைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பணியில் இருக்கும்போது இறக்கும் வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சேமநலநிதி 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதிக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை 4 கோடி ரூபாயிலிருந்து 8 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 220 உரிமையியல் நீதிபதி பணியிடங்கள், நேரடி நியமனம் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2018-19ஆம் ஆண்டு நிரப்பப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்கள் பற்றிய விவரங்களை குறிப்பிட விரும்புகிறேன். சேலம் மாவட்டத்தில் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் 1-ம், கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் 3-ம், கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் மேட்டூரில் 1-ம், மாவட்ட தனி நீதிமன்றங்கள், மகளிர் நீதிமன்றம், போதை பொருள் தடுப்பு சட்ட நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், தொழிலாளர் நல நீதிமன்றம், விபத்து வழக்குகள் விசாரணை சிறப்பு நீதிமன்றங்கள், மக்கள் நல நீதிமன்றங்கள் அமைந்துள்ளன.

மேலும், மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர் மற்றும் ஓமலூரில் சார்பு நீதிமன்றங்களும், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், மற்றும் மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர் மற்றும் ஓமலூரில் குற்றவியல் நீதிமன்றங்கள், ஊழல் தடுப்பு சட்டம் சிறப்பு நிதிமன்றம், விபத்து வழக்கு சிறப்பு நீதிமன்றங்கள் 2-ம், சொத்துவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (சேலம் மாநகராட்சி), குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் சேலத்தில் 6-ம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூரில் தலா 2-ம், ஓமலூரில் 1-ம், அமைந்துள்ளன.

காசோலை மோசடி வழக்குகள் நீதிமன்றங்கள் ஆத்தூர் மற்றும் ஓமலூரிலும், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வாழப்பாடியிலும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நீதிமன்றங்கள் பலதரப்பட்ட வழக்கு தன்மைகளை கொண்ட வழக்குளை விசாரித்து நீதிபரிபாலனம் செய்து வருகின்றன.

உச்ச நீதிமன்ற ஆணைப்படி, தமிழ்நாட்டில், குறிப்பிட்ட கால இடைவெளியில் மாவட்டந்தோறும் நடைபெறும் மக்கள் நீதிமன்றம் வாயிலாக ஒரே நாளில் பல தரப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு, அதிக அளவில் தீர்வு கண்ட மாவட்டங்களில் சேலம் மாவட்டமும் ஒன்று என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இது தவிர சமரச தீர்வு மையம் மூலம் சில வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

சங்ககிரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு 6 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் யுசுப் இக்பால் துவக்கி வைத்தார். சங்ககிரியில் கிரிமினல் வழக்குக்களுக்கென ஒரு சார்பு உட்பிரிவு நீதிமன்றம் 1914 ஆம் ஆண்டு அன்று அமைக்கப்பட்டது. 198-ம் ஆண்டு சார்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. மேலும் மேட்டூரில் கட்டப்பட்டுள்ள சார்புநிலை நீதிமன்ற வளாகம் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வளாகம் ஆகும். சார்புநிலை நீதிமன்ற வளாகங்களில் முதன்முதலில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வளாகம் மேட்டூர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மா அவர்களின் ஆட்சியிலும், பிறகு அம்மாவின் வழியில் செயல்படும் அம்மாவின் அரசிலும் சேலம் மாவட்டத்தில், ஆத்தூர் விரைவு நீதிமன்றம், சேலம் கூடுதல் மகளிர் நீதிமன்றம், நில அபகரிப்புக்கான சிறப்பு நீதிமன்றம், நடமாடும் நீதிமன்றம், ஓமலூர் விரைவு நீதிமன்றம், ஓமலூர் சார்பு நீதிமன்றம், ஓமலூர் மாவட்ட முன்சீப் நீதிமன்றம், வாழப்பாடி நீதிமன்றம், மேட்டூர் கூடுதல் நீதிமன்றம் (விரைவு) போன்ற பல்வேறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் 2011 முதல் 30.3.2019 வரை துவங்கப்பட்டன. அதேபோல, 28.1.2012ல் சங்ககிரி நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டிடம், மார்ச் 2013-ல்– ஓமலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ஆத்தூர் மற்றும் மேட்டூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் ஆகியவற்றிற்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

அம்மாவின் அரசின் இடையறா முயற்சியின் காரணமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டு வருகின்றன. உயர் நீதிமன்றத்தின் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசிடம் அம்மாவின் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

நீதித்துறையில் மின்னணு ஆளுமை முறைகளை புகுத்துவதன் அவசியத்தையும். அதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளையும் கருத்தில் கொண்டும், இத்துறையில் முழுமையாக மின்னணு ஆளுமை முறைகளைக் கொண்டு வர ஏதுவாக நீதிமன்றங்களில் நீதிசார்ந்த மின்னணு முத்திரைத்தாள் முறையினை புகுத்திட வேண்டுமென்ற உயர்நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று, அம்மாவின் அரசால் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீதித்துறையில் கணினிமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மாநிலத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர ஏதுவாக பல்வேறு பதவிகளுக்கு 1188 பணியிடங்கள் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகம் மற்றும் கலையரங்கம் அமைப்பதற்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

நீதியரசர் சுந்தரேஷ் அழகாகச் சொன்னார், எடப்பாடி தொகுதியைப் பற்றி நன்கு அறிந்திருக்கின்றார். முருக பக்தர்கள் அதிகமாக இருக்கின்ற பகுதி எடப்பாடி என்று சொன்னார், அது உண்மை தான். தைப்பூச திருவிழாவை எடப்பாடி நகர மக்களும், சுற்று வட்டார மக்களும் மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள். காவடி எடுத்துக் கொண்டு பாத யாத்திரையாக நடந்து சென்று பழனி முருகனை தரிசனம் செய்கின்றபொழுது, இரவு தங்குவதற்கு எடப்பாடி காவடிக்காரர்களுக்கு மட்டும்தான் சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது.

இது காலம்காலமாக இருந்து வருகிறது. ஆகவே, முருகனை பாதயாத்திரையாக சென்று தரிசிக்கின்றவர்களுக்கு அங்கேயே தங்கக்கூடிய சிறப்பும் பெற்றவர்கள் எடப்பாடி நகர மற்றும் சுற்றுவட்டார மக்கள் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல, இந்த மக்களுடைய கோரிக்கையை ஏற்று நானும், என்னுடைய நண்பர்களும், குடும்பத்தினரும் சேர்ந்து தனியாக ஒரு முருகன் கோவிலையே நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்திலே கட்டி திறந்திருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எடப்பாடி பகுதி ஒரு பின்தங்கிய பகுதி. வழக்குகள் எல்லாம் சங்ககிரிக்கு சென்று கொண்டிருந்த நிலையை மாற்றி, நம்முடைய பகுதியிலேயே அந்த ஏழைகளுக்கு குறுகிய காலத்திலேயே நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த நீதிமன்றம் திறக்கப்பட்டிருக்கின்றது. நம்முடைய தலைமை நீதிபதியும், உயர்நீதிமன்ற நீதியரசர்களும், மற்ற நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் நம்முடைய தொகுதிக்கு வந்து நேரடியாக இந்த நீதிமன்றத்தை திறந்து வைத்ததற்கு மக்களின் சார்பில், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலே அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதன் அடிப்படையிலே, விரைவில் தமிழகத்தில், பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்க அரசு, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

விரைவாக நீதி கிடைக்கச் செய்வதைக் கருத்தில் கொண்டு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பணியாளர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நீதிமன்றங்களின் தேவைகளுக்கு ஏற்ப உடனுக்குடன் நிறைவேற்றுகின்ற அரசாக என்னுடைய அரசு திகழும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல, நமது சட்டத்துறை அமைச்சர், தலைமை நீதியரசர் என்ன சொல்கின்றார்களோ, அடுத்த விநாடியே அதை நிறைவேற்றுவதற்கு நேரடியாக என்னிடத்தில் வந்து கையொப்பம் பெற்றுச் செல்வார். ஆகவே, நீதிபதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் எங்களுடைய அரசு செய்து கொடுக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் ஆசிரியர்களையும், நீதிபதிகளையும் மிகவும் மதிக்கின்றோம். நீதியரசர்களையும், ஆசிரியர்களையும், கடவுளுக்கு சமமானவர் என்று குறிப்பிடுவார்கள். ஆகவே, நீதியரசர்களையும், ஆசிரியர்களையும் இறைவனுக்கு சமமாக கருதுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை நீதிபதியே நேரடியாக வந்து எடப்பாடி நீதிமன்றத்தை திறந்து வைத்தமைக்கும், அவரோடு வருகை தந்த உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.