சிறப்பு செய்திகள்

பெரியகுளம்,ஆண்டிப்பட்டி,போடியில் மழைநீர் சேகரிப்பு திட்டப்பணிகள் – துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்….

தேனி:-

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி தொகுதிகளில் கண்மாய்கள் தூர்வாருதல், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு, நிலத்தடி நீர்மட்ட செறிவூட்டல், மரக்கன்று நடவு செய்தல் ஆகிய பணிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) ஆகிய துறைகளின் சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் பெரியகுளம், போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கண்மாய்கள் தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, நிலத்தடி நீர்மட்ட செறிவூட்டல், மரக்கன்று நடவு செய்தல் ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், முன்னிலையில் நேற்று துவக்கி வைத்து, குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தர்மாபுரி ஊராட்சியில் கன்னிமார்குளம் கண்மாய், கோட்டூர் ஊராட்சியில் பூச்சிகுளம் கண்மாய், நாகலாபுரம் ஊராட்சியில் பூசாரிக்கவுண்டன்பட்டி குளம் கண்மாய், இராசிங்காபுரம் ஊராட்சியில் கவுண்டன்குளம் கண்மாய், ஆகிய கண்மாய்கள் தூர்வாரும் பணிகளையும், தர்மாபுரி ஊராட்சியில் பெருமாள் கோயிலில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணி, கன்னிமார் குளத்துக்கு அருகில் பொது இடத்தில் 200 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி,

10 வீடுகளின் மேற்கூரை மழைநீர் சேகரிப்பு அமைப்பு மூலம் தூர்ந்து போன ஆழ்துளைக் கிணற்றில் நிலத்தடி நீர்மட்ட செறிவூட்டல் பணி, கோட்டூர் ஊராட்சியில் கோபிநாதன் கோயில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு பணி, பூச்சிகுளம் கண்மாய் அருகில் பொது இடத்தில் 400 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி, 10 வீடுகளின் மேற்கூரை மழைநீர் சேகரிப்பு அமைப்பு மூலம் தூர்ந்து போன ஆழ்துளைக் கிணற்றில் நிலத்தடி நீர்மட்ட செறிவூட்டல் பணி, நாகலாபுரம் ஊராட்சியில் சுப்புச் செட்டியார் தோட்டத்தில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணி ஆகிய பணிகளை துவக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து துணை முதலமைச்சரின் வழிகாட்டுதல் மற்றும் பங்களிப்புடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தன்னார்வல தொண்டர்கள் பொதுமக்களுடன் இணைந்து, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்கரை பேரூராட்சியில் பாப்பையன்பட்டி கண்மாய், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோடாங்கிபட்டி ஊராட்சியில் கணக்கன்குளம் கண்மாய்கள் தூர்வாரும் பணி, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு)-யின் சார்பில், டொம்புச்சேரி ஊராட்சியில் டொம்புச்சேரியம்மன் கண்மாய், சில்லமரத்துப்பட்டி ஊராட்சியில் கவுண்டன்குளம் கண்மாய், பூதிப்புரம் பேரூராட்சியில் ராஜபூபாலசமுத்திரம் கண்மாய், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்குளம், கருங்குளம் கண்மாய் ஆகிய கண்மாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சிகளின் போது, கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி, செயற்பொறியாளர் எம்.கவிதா, உத்தமபாளையம் வருவாய் கோட்ட சார் ஆட்சியர் டாக்டர் ஆர்.வைத்திநாதன், இ.ஆ.ப., பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயபிரித்தா, உதவித்திட்ட அலுவலர் தண்டபாணி, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரஅமைப்பு) செயற்பொறியாளர் சுந்தரப்பன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவிப்பொறியாளர் ராமேஸ்வரன், வட்டாட்சியர்கள் மணிமாறன், ரத்தினமாலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீஸ் சந்திரபோஸ், எபி, சுரேஷ், சாந்தி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.பார்த்திபன், எஸ்.பி.எம்.சையதுகான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.