தற்போதைய செய்திகள்

மக்கள் இயக்கமாக மாறிய குடிமராமத்து திட்ட பணிகள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்…

மதுரை:-

குடிமராமத்து திட்ட பணிகள் மக்கள் இயக்கமாக மாறி விட்டதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதத்துடன் கூறினார்.

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் நீராதாரத்தை பெருக்கும் வண்ணமும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் விவசாயிகள் தங்களின் நிலங்களுக்கு ஏரி கண்மாய்களில் இருக்கும் சத்து நிறைந்துள்ள வண்டல் மண்களை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்ற உன்னத திட்டத்தை கொண்ட குடிமராமத்து திட்டத்தை 2017-ம் ஆண்டு உருவாக்கினார்.

அதனை தொடர்ந்து தற்போது மழைநீரை ஒரு சொட்டு கூட வீணாக்காமால் மழைநீரை சேமிக்கும் வண்ணமும் குக்கிராமங்களில் இருக்கும் ஏரி, கண்மாய்கள், ஊருணிகள் உள்ளிட்ட பாசன வாய்க்கால்களை செப்பனிடவும் பண்ணைக்குட்டைகளை உருவாக்கும் வண்ணமும் கழிவு நீரை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் பெருமளவில் ஊக்கப்படுத்தும் வண்ணமும் வேளாண்மைக்கு திறம்பட நீரை பயன்படுத்திக்கொள்ள உறுதி செய்யவும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் என்ற ஒரு தீவிர மக்கள் இயக்கத்தை தொடங்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

அதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர்மேலாண்மை இயக்கம் என்ற மக்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் அனைத்து குக்கிராமங்களிலும் உள்ள சிறுபாசன ஏரிகள், குட்டைகள் மற்றும் ஊருணிகள் ஆகியவை குடிமராமத்து செய்யப்பட்டு வருகின்றன.

அதனையொட்டி சோழவந்தான் தொகுதியில் உள்ள வாடிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள குட்லாடம்பட்டியில் நாகர்குளம் கண்மாய், உசிலம்பட்டி தொகுதியில் உள்ள மேக்கிழார் கண்மாய் ஆகியவை குடிமராமத்து செய்யும் பணி நடைபெற்றது. சோழவந்தான் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம் தலைமை தாங்கினார். உசிலம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பா.நீதிபதி தலைமை தாங்கினார். இந்த தூர்வாரும் பணியை வருவாய், பேரிடர், மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் எஸ்.பி.அம்ரித், வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அனுராதா, ஊராட்சி உதவி இயக்குநர் செல்லத்துரை, வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், ஒன்றிய கழக செயலாளர்கள் செல்லப்பாண்டி, ரவிச்சந்திரன், ராஜா, அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், நகர செயலாளர் பூமாராஜா, விஜயன், பேரூர் கழக செயலாளர்கள் பாப்புரெட்டி, கொரியர் கணேசன், அழகுராஜா, குமார், மற்றும் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் ஜெயராமன் ராஜேஸ்கண்ணன், காளிதாஸ் மற்றும் கிராமப்புற விவசாய பெருமக்கள், இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

உலகளவில் நீர்ஆதாரங்கள் குறைந்து வருகின்றது அதனால் தான் புரட்சித்தலைவி அம்மா தொலைநோக்கு சிந்தனையுடன் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை உருவாக்கினார். அதைத்தொடர்ந்து முதலமைச்சரும் நீர் ஆதாரத்தை பெருக்கும் வண்ணம் கரிகால்சோழன் காலத்தில் உருவாக்கப்பட்ட குடிமராமத்து திட்டபணியை உருவாக்கினார். அதன்படி கடந்த 2016-2017ம் ஆண்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு 1519 ஏரி, கண்மாய்கள் தூர்வாரப்பட்டன.

அதனைத்தொடர்ந்து 2018-2019ம் ஆண்டில் ரூ.328 கோடி மதிப்பில் 1511 ஏரி, கண்மாய்கள் தூர்வாரப்பட்டன. தற்போது இந்த ஆண்டிற்கும் ரூ.500 கோடி ஒதுக்கி 1819 ஏரி, கண்மாய்கள் தூர்வாரப்பட உள்ளன. தொடர்ந்து முதலமைச்சர் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் நிலத்தடி நீரை அதிகப்படுத்தவும் வேளாண்மை அதனை சார்ந்த துறைகளுக்கு நீர் பயன்பாட்டை அதிகரிக்கவும், மானாவாரி வேளாண்மைக்காக மழைநீரை சேகரிக்கவும், கழிவு நீரை மறு சுழற்சி செய்து உபயோகப்படுத்தவும் குறிப்பாக ஆறுகள், ஏரிகள், உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரை சேகரிக்கவும் இதனை போன்று பல்வேறு அம்சங்கள் கொண்டு அனைத்து குக்கிராமங்களிலும் நீர் பாதுகாப்பு வாரியம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு நீர்வள பாதுகாப்பு மக்கள் இயக்கத்தை அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் நடைபெறும் குடிமராமத்து திட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் கிராமங்கள் தோறும் சிறுபாசன ஏரிகள், குட்டைகள் போன்ற பல்வேறு நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் பொதுமக்கள் பங்களிப்புடன் இந்த நீர்நிலை பாதுகாப்பு மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. எப்படி புரட்சித்தலைவி அம்மா அறிவித்த மழைநீர் சேகரிப்பு திட்டம் மக்கள் இயக்கமாக மாறியதோ, அதே போல் இன்றைக்கு முதலமைச்சர் உருவாக்கிய நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி உள்ளது.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்வள ஆதாரபாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் 318 சிறு பாசன கண்மாய்களும், 1576 ஊருணிகள் மற்றும் குளங்கள் குடிமராமத்து பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை மட்டும் ரூ.31 கோடி ஆகும். இதில் மண்வேலையும், மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தேவையான கட்டுமான பணிகளையும், 10 சதவிகிதம் மக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது கூட சோழவந்தான் தொகுதியில் ரூ.55 லட்சம் மதிப்பில் 2 சிறு பாசன கண்மாய்களும், 24 ஊரணிகள் மற்றும் குளங்களும் சீரமைக்கப்பட உள்ளது அதே போல் உசிலம்பட்டி தொகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பில் ஒரு சிறு பாசன கண்மாயும், 77 ஊருணிகள் மற்றும் குளங்கள் சீரமைக்கப்பட உள்ளன. பொதுவாக ஒரு மனிதனுக்கு தேவை நீர் தான் நீர் இருந்தால் தான் நாம் வாழ முடியும் ஏன் நாம் சாப்பிடும் உணவைக்கூட உற்பத்தி செய்ய நீர் அவசியம்.

ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய 2497 லிட்டர் தண்ணீர் தேவை, அதே போல் 1 கிலோ மக்காச்சோளத்தை உற்பத்தி செய்ய 1222 லிட்டர் தண்ணீர் தேவை ஏன் சீனி உற்பத்தி செய்யக்கூட 1787 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இப்படி தண்ணீர் இல்லாமல் விவசாயம் சிறக்காது. அதேபோல் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கும், எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் வாரி வழங்கி வருகிறார். ஏனென்றால் அவரும் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர் தான்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.