தற்போதைய செய்திகள்

மாநில அரசின் நடவடிக்கைகளால் சாலை விபத்து உயிரிழப்பு குறைவு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்…

நாமக்கல்

மாநில அரசின் நடவடிக்கைகளால் சாலை விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட கழகச் செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசியதாவது:-

மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டம் 1988-ஐ திருத்தம் செய்தபோது அதில் 94 சரத்துக்கள் மாற்றப்பட்டன. இதனால் தமிழக மோட்டார் தொழிலில் சில பாதிப்புகள் ஏற்பட்டபோது, மாநில அரசு, பிரதமர், துறை சார்ந்த அமைச்சரிடம் பேசி அந்த குறை களைந்துள்ளது. பொதுவாக ஏற்படும் சாலை விபத்துகளில் கனரக வாகனங்கள் மீது தான் குற்றம் சுமத்தப்படுகிறது.

எனவே, யார் சாலை விதிமுறையைமீறி வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தினாலும் போக்குவரத்துத்துறை பாரபட்சமின்றி வழக்கு தொடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்ட மசோதாவில் கனரக வாகனங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாகனம் புதுப்பித்தல் (எப்.சி) முறையை கொண்டு வர மத்திய அரசிடம் போக்குவரத்துத்துறை மூலம் வலியுறுத்தி, செயல்படுத்துவோம். வரும் 13-ந்தேதி முதல், இ-சலான்- மின்னணுச் சீட்டு அபராதம் விதிக்கும் திட்டம் திருச்சியில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரை இதன்மூலம் உடனுக்குடன் அபராதம் செலுத்த வைக்க முடியும்.

மாநில அரசு, சாலை பாதுகாப்பு நிதியை ரூ.2 கோடியில் இருந்து ரூ. 60 கோடியாக உயர்த்தி அளித்து, பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு 15 சதவீதமாக குறைந்துள்ளது. அதுவே ஒரு வருடத்திற்கு 24 சதவீதமாக குறைந்துள்ளது. இதனை உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்பு குழு தேசிய அளவில் சிறந்த செயலாக பாராட்டி உள்ளது.

நகர்புறங்களில் 90 சதவீதம் பேர் தலைக்கவசம் அணிந்துள்ளனர். கிராம புறங்களில் இருச்சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும். அண்டை நாடான இலங்கையில் அனைவரும் ஹெல்மெட் அணிதல் உள்ளிட்ட சாலை போக்குவரத்து விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தைத் தடுக்க, செங்கல்பட்டு-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரூ. 25 கோடி மதிப்பில் தானியங்கி அபராதம் விதிக்கும் நவீன முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகும் சாலை போக்குவரத்து விதி மீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கபடுகிறது. இதேமுறை தமிழகத்தின் 5 பெரிய தேசிய நெடுஞ்சாலைகளில் விரைவில் அமல்படுத்தப்படும்.

தமிழகத்தில் 825 மின்சார பேருந்துகளை இயக்க மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. போக்குவரத்து வாகனங்களால் புவி வெப்பமடையாமல் இருக்க தமிழகம் ஜெர்மன் நிறுவனமான சி-40 நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. தேசிய அளவில், தமிழகம்தான் இதுபோன்ற ஒப்பந்தத்தை மேற்கொண்ட முதல் மாநிலமாக உள்ளது.

வரும் ஆண்டுகளில் 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் மற்றும் 12 ஆயிரம் பி.எஸ். 6 பேருந்துகள் குறைந்த வட்டி விகிதங்களில் தயாரித்து வழங்க கே.எப்.டபிள்யு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல், நவீன சுற்றுச்சூழலுக்கு உகந்த, மின்சாரம் மற்றும் பி.எஸ். 6 ரக பேருந்துகள் படிப்படியாக இயக்கப்படும். இந்த நவீன ரக சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகள் இயக்கப்படும்போது போக்குவரத்துத் துறையில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் நகர கழக செயலாளரும், தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.பாஸ்கர், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் எம்.ஆர்.குமாரசாமி, செயலர் வாங்கிலி, பொருளாளர் தன்ராஜ், மாநில, மாவட்ட நிர்வாகிகள், லாரி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.