தற்போதைய செய்திகள்

ஒன்றிணைந்து செயல்பட்டு நீர்வளத்தை பெருக்குவோம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறைகூவல்…

திருப்பூர்:-

அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு நீர்வளத்தை பெருக்குவோம் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறைகூவல் விடுத்துள்ளார்.

நீர் வளத்தினை மேம்படுத்திடவும் அவற்றை பாதுகாத்திடவும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து வேண்டுகோள் விடுத்தார்.

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் குளம், குட்டைகள் சீரமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  துவக்கி வைத்து பேசியதாவது:-

இம்மண்ணுலகை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் என்றென்றும் வாழ்ந்து வருகின்ற இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மழைநீர் சேகரிப்பை முன் நடத்திச் செல்லவும், நீர் நிலைகளின் கொள்ளளவினை அதிகப்படுத்தி பாதுகாத்திடவும் மற்றும் வேளாண் பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் வேளாண்மைக்கு நீர் திறம்பட பயன்படுத்தி உறுதி செய்யவும்,

கழிவு நீர் மற்றும் பயன்படுத்தப்பட்ட நீரினை சுத்திகரித்து மறு சுழற்சி முறையில் உபயோகிப்பதை பெருமளவில் ஊக்கப்படுத்த நீர் வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர்வள மேலாண்மை இயக்கம் என்ற ஒரு தீவிர மக்கள் இயக்கத்தை தொடங்க முதலமைச்சர் தமிழக சட்டப்பேரவையில் 20.07.2019 அன்று விதி எண் 110-ன் கீழ், ‘ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் கிராமம் தோறும் ஏரிகள், குட்டைகள் மற்றும் ஊருணிகள் போன்ற நீர்நிலைகளின் கொள்ளளவினை அதிகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.

மேலும் குளங்களைத் தூர்வரி ஆழப்படுத்த மாநில நிதியாக ஒரு குளத்திற்கு ரூ.1.00 இலட்சமும், குளங்களில் சிறு குட்டை, சிறு குட்டைக்கு கட்டுமான பணிகள், நீர் உள்வரும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் அமைப்புகள் ஏற்படுத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியிலிருந்து ரூ.2 லட்சமும் என 824 குளங்களுக்கு ரூ.24.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மாநில நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் இயந்திரங்கள் மூலம் செயல்படுத்தப்படும். இதற்கு 2019-20ம் ஆண்டு பொதுப்பணித்துறை விலைப் பட்டியல் பின்பற்றப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட விதிகளின்படி மனித சக்தி மற்றும் பொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளது. குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தி மழைநீர் சேமிக்கபப்படுவதால், விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர் மட்டம் உயருகிறது. ஊரகப் பகுதிகளில் குடிநீர் ஆதாரமான ஆழ்குழாய் கிணறுகளில் நீர் மட்டம் உயாந்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது. நீர் வளத்தை மேம்படுத்திடவும் அவற்றை பாதுகாத்திடவும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு நீர் வளத்தினை பெருக்கிட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தொடர்ந்து பெரியபட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆலாமரத்துக் குளத்திலும் தூர்வாரும் பணியினையும் அமைச்சர் துவக்கி வைத்தார்.