தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ரூ.3.50 கோடியில் சுற்றுச்சுவர் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அறிவிப்பு…

திருச்செந்தூர்:-

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ரூ.3.50 கோடியில் சுற்றுச்சுவர் கட்டி தரப்படும் என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அறிவித்தார்.

சென்னை தமிழ்ச்சங்கம் சார்பில் பன்னாட்டு முருகபக்தர்கள் மாநாடு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சென்னை தமிழ் சங்க புரவலர் பாலசுப்ரமணியன் வரவேற்புரையாற்றினார். சென்னை தமிழ்ச் சங்க தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ராஜேந்திரன் துவக்கவுரையாற்றினார்.

மாநாட்டை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழக செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ, முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

இந்த மாநாட்டில் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா, மலேசிய மற்றும் இலங்கை அமைச்சர்கள் கலந்து கொண்டு மாநாட்டு மலரை வெளியிட்டனர். மாநாட்டில் குருமகா சன்னிதான மடாதிபதிகள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் முதன்மை செயலாளர் ராஜாராம் இலங்கை அரசின் இந்து சமய விவகாரத்துறை அமைச்சர் மனோ கணேசன், இலங்கை அரசின் விசேஷ பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் இராதாகிருஷ்ணன், மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ.மு.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா வாழ்த்துரை வழங்கினார்

இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், திருச்செந்தூர் முருகன் கோயிலை சுற்றி ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் தற்காலிக சுற்றுசுவர் கட்டப்படும். புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியில் அத்தனை கோயில்களையும் சீரமைத்து இறைவனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து வருகின்றனர். புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியை நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மேலும் பழமையான கோயில்களை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதனால் கும்பாபிஷேகம் நடத்தாமல் இருக்கும் பழமையான கோவில்களை கண்டறிந்து உடனடியாக அக்கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதன்பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசுகையில், திருச்செந்தூர் திருத்தலத்தில் பக்தர்கள் தங்க வசதியாக ரூ. 36 கோடியில் யாத்திரிகள் நிவாஸ் கட்டிக் கொடுக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்தவித குறைகள் இருந்தாலும் அதனை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருவதுடன், கோயிலை சிறப்பாக பராமரித்திட உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். 144 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் புஷ்பகரணி விழாவையும் சிறப்பாக நடத்த அம்மாவின் அரசு ஆவன செய்து வருகிறது.

நாற்பது வருடங்களுக்கு முன்பு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நல்லாட்சியில் தான் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்போதும் கழகம் தான் தமிழகத்தை ஆட்சி செய்தது. 40 வருடங்களுக்கு பின்பு தற்போது அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். இப்பொழுதும் தமிழகத்தில் கழக ஆட்சி தான் நடக்கிறது. இனி எப்பொழுதுமே தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான கழகம் தான் ஆட்சி செய்யும். அதில் எவ்வித மாற்றமும் கிடையாது. அதற்கு இந்த திருச்செந்தூர் முருகப்பெருமானும் உறுதுணையாக இருப்பார்கள்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.