தற்போதைய செய்திகள்

சிறுமலையை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த துரித நடவடிக்கை – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தகவல்…

திண்டுக்கல்:-

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் பல்லுயிர்ப்பூங்கா அமைப்பதற்கான பகுதியை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமி முன்னிலையில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் மலைக்கு அருகில் சிறுமலை உள்ளது. சிறுமலையில் வளமான பல்லுயிர் வகை காடுகளும், அதே நேரத்தில் நடுமலைப் பகுதியில் வெப்பமண்டல வறண்ட இலையுதிர் காடுகளும் அமைந்துள்ளன. இங்கு வளர்ந்துவரும் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் காப்பித்தோட்டங்கள், பழத்தோட்டங்கள், பல காய்கறி பயிர்கள் பயிரிடுதல் ஆகியவற்றின் விளைவாக சிறுமலையில் உள்ள அரிய வகை தாவரங்களும் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளன. சிறுமலையின் தாவரங்கள் கணக்கெடுப்பு ஆய்வின்படி தென்னிந்தியாவில் உள்ள தாவர வகைகளில் 536 உயிர் தாவரங்களையும், 895 சிற்றினங்களையும் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சிறுமலை மலைப்பகுதியின் காட்டு எருமை, செந்நாய், மான், கேளையாடு, கரடி, முள்ளம்பன்றி, நரி, குரங்கு, சாம்பல் அணில், கீரி, பாம்பு, ஆந்தை, கழுகு, பட்டாம்பூச்சிகள் போன்ற உயிரினங்களும், தனக்கு, உசில், மருத மரம் என பல்லுயிர் பெருகி கிடக்கும் பசுஞ்சோலை சிறுமலைக்காடாகும். மேலும் சிறுமலையின் சீதோசன நிலையும் மற்றும் பசுமை நிறைந்த புல்வெளிகளும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவருவதாக உள்ளது. மேலும் சிறுமலை பகுதி பல்வேறு மருத்துவ மூலிகைகளையும், அரிய வகை மற்றும் அழிந்து வரும் மரங்களையும் உள்ளடக்கிய பகுதி என்பதால், இங்கு பல்லுயிர் பெருக்க பூங்கா அமைவதற்கு ஏதுவான இடமாகும்.

வளர்ந்து வரும் நகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இழந்த பன்முகத்தன்மையை மீட்டெடுக்கும் விதமாக அரிதான மற்றும் அழிவின் தருவாயில் உள்ள உயிரினங்கள் மற்றும் தாவரங்களை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர், சிறுமலையில் 120 ஏக்கர் பரப்பளவில் ரூ.5 கோடி திட்டமதிப்பீட்டில் பல்லுயிர்ப்பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார். சிறுமலையில் பல்லுயிர்ப்பூங்கா அமைவதன் மூலமாக, அரியவகை மூலிகை தாவரங்களையும், அரிய வகை மரங்களை பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவும், அவற்றின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தவும் வாய்ப்பாக இருக்கும்.

இப்பூங்காவில் மூங்கில் பூங்கா, ஆர்க்கிடோரியம் பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு பூங்கா, பல்லுயிர் பெருக்கத்தின் அவசியத்தை விளக்கும் வண்ணம் பல்வேறு வசதிகளுடன் கூடிய பார்வையாளர் தகவல் மையம் அமைத்தல், கள்ளிச்செடி தோட்டம், பனைப்பூங்கா போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடங்கியதாக அமைப்பதன் மூலம் இயற்கை வளத்தினை பாதுகாப்பதின் அவசியத்தை அறியவும், வனத்தினை பற்றிய கல்வி அறிவினையும் மக்களுக்கு வழங்குவதற்கும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு குழுக்கள் அமைத்து அதன் மூலம் வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.

சுற்றுலாப்பயணிகளின் வசதிக்கேற்ப தங்கும் விடுதி அமைத்தல், உணவகங்கள், இப்பகுதியில் சுற்றுலா இடங்கள் குறித்து சுற்றுலாப்பயணிகளுக்கு விளக்குவதற்கென சுற்றுலா வழிகாட்டிகள் நியமித்தல், பேருந்து வசதிகள் போன்றவைகளை ஏற்படுத்தி சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

சிறுமலை ஊராட்சியில் இருந்து பல்லுயிர்ப்பூங்கா அமைப்பதற்கென தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதி வரை உள்ள 7.4 கி.மீ. தூரத்திற்கு ரூ.2 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு வசதிகள் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்று, சிறுமலை பகுதியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, சிறுமலை பகுதியில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள், கோரிக்கைகள் குறித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வி.பி.பி.பரமசிவம், முன்னாள் மேயர் வி.மருதராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு மற்றும் தலைமை வனப்பாதுகாவலர் திருநாவுக்கரசு, மாவட்ட வன அலுவலர்கள் தேஜஸ்வி, (கொடைக்கானல்), அன்பு (கரூர்) மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.